கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு உரிய வசதிகளை வழங்கி நாடு திரும்ப பாதுகாப்பு வழங்கவும்

- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வழங்க வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ரோஹிணி மாரசிங்க மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டரீதியாக உரிமையுள்ள பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் இல்லாமல் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்ப முடியாமல் உள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு அமைய, எந்தவொரு குடிமகனும் தனது நாட்டிற்கு திரும்புவதற்கு அரசியலமைப்பில் உரிமை உள்ளதாக, ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுக்கும் நிலையில், தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதாகவும் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...