நடிகர் ஜெக்சன் அந்தனியை பார்வையிட வைத்தியசாலை சென்ற ஜனாதிபதி ரணில்

அநுராதபுரத்தில் அண்மையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபல சிங்கள நடிகரும். வரலாற்றாசிரியருமான ஜெக்சன் அந்தனியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

ஜெக்சன் அந்தனி சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலை அறைக்குச் சென்ற ஜனாதிபதி, அவரது சிகிச்சைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு, வைத்தியர்களிடமும் இது தொடர்பில் கேட்டறிந்தார்.பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வைத்தியசாலை பணிப்பாளரைச் சந்தித்து ஏனைய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

மருந்துப் பற்றாக்குறையை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடு பூராகவும் உள்ள மருந்துப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் வாழ்வில் தமக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதனையடுத்து ஜெக்சன் அந்தனியின் மனைவியைச் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தனியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

எதிர்கால சிகிச்சை தொடர்பாக ஏதேனும் உதவிகள் இருப்பின் உடனடியாகத் தமக்குத் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்த ஜனாதிபதி, சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்களிடம் நலம் விசாரிக்கவும் மறக்கவில்லை.


Add new comment

Or log in with...