கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் பயிரிடும் உள்ளூர் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்ள அரசு அனுமதிக்காது

அமைச்சர் மஹிந்த அமரவீர

உள்ளூர் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை பயிரிடும் விவசாயிகள் எவ்வித சிரமங்களையும் எதிர்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என விவசாய வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், விவசாயிகளையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு. அதேபோல், விவசாய உற்பத்திகளுக்கு குறைந்த உத்தரவாத விலையினை பெற்றுக் கொடுத்து நுகர்வோருக்கும் குறைந்த விலையில் விவசாய உணவு உற்பத்திகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஒருபோதும் விவசாய உற்பத்திகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்த அமைச்சர், உள்ளூர் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைவடைந்தால் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். தற்பொழுது உள்ளூர் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் இவற்றின் விலைகள் குறைவடையும் சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்காக அரசாங்கம் தலையிடும் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

 


Add new comment

Or log in with...