சுயதொழில் வேலை வாய்ப்புத் திட்டங்களின் ஊடாக 5.2 இலட்சம் தொழில்கள் காஷ்மீரில் உருவாக்கம்

-  இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரசேத அரசு கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் சுயதொழில் வேலைவாய்ப்பு திட்டங்களின் ஊடாக 5.2 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாக  இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் 29 ஆயிரத்து 806 பேருக்கு யூனியன் பிரதேச அரசு பொதுத்துறையில் வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது என்று மத்திய உள்துறை இராஜாங்க அமைச்சர் நித்தியானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரின் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் 2019 இல் இரத்து செய்யப்பட்டது. அதன் பின்னரான கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் ஜம்மு-காஷ்மீரின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களான கபில் சிபல், ரஜனி அசோக்ராவ் பாட்டீல் மற்றும் பூலோ தேவி நேதம் ஆகியோர் எழுத்து மூலம் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜம்மு காஷ்மீரின் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அவற்றில் வீதி, மின்சாரம், சுகாதாரம், கல்வி, சுற்றுலா, விவசாயம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகள் அடங்கும். இவ்வேலைத்திட்டங்களுக்கென 58,477 கோடி ரூபா செலவிடப்படுகின்றது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கைத்தொழில் அபிவிருத்திக்காக 28,400 கோடி ரூபா செலவில் ஒரு புதிய மத்திய துறைத்திட்டம் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. அதேநேரம் 54,000 கோடி ரூபா பெறுமதியான முதலீட்டு விண்ணப்பங்களை ஜம்மு காஷ்மீர் பெற்றுள்ளது. இவற்றில் 36 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு கைத்தொழில் துறைக்கு பொருத்தமான காணிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பல வருடங்களாக பூர்த்தி செய்யப்படாத 1193 திட்டங்கள் 1984 கோடி ரூபா செலவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 20 வருடங்களாக செய்து முடிக்கப்படாத ஐந்து திட்டங்களும் அடங்கும்.  பனிஹால்  மற்றும் செனானி-நஷ்ரி சுரங்கப்பாதைகள் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதோடு ராம்பாக் மேம்பால நிர்மாணப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் என ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...