மற்றொரு தொகுதி மனிதாபிமான உதவியை உக்ரைனுக்கு இந்தியா அனுப்பி வைக்கும்

- வெளிவிவகார அமைச்சர்  ஜெய்சங்கர் உறுதி

ரஷ்யாவுடன் மோதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனுக்கு மற்றொரு தொகுதி மனிதாபிமான உதவியை இந்தியா விரைவில் அனுப்பி வைக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்பு கொண்டு உக்ரைன் -ரஷ்ய மோதல் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு உறுதி அளித்துள்ளார்.

ரஷ்யாவுடனான மோதலின் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் அதன் விளைவாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இச்சமயம் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டுள்ளனர். 

ரஷ்யப் பிரசாரத்தை ஊக்குவிப்பர்கள் தொடர்பான தனிநபர் பட்டியலொன்றை உக்ரைன் சில வாரங்களுக்கு முன்னர் தயாரித்துள்ளது. அப்பட்டியலில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசனை சபைத் தலைவர் பி.எஸ். ராகவன் உட்பட மூன்று இந்தியப் பிரஜைகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு சில வாரங்கள் கடந்துள்ள நிலையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இக்கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இக்கலந்துரையாடல் குறித்து விடுத்துள்ள ட்வீட்டில், 'உக்ரைன் வெளிவிவகார அமைச்சருடனான கருத்துப் பரிமாறலைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

ரஷ்ய - உக்ரைன் நெருக்கடியானது இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது தெரிந்ததே என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...