இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக தேசிய விளையாட்டு சபை விசாரணை

தேசிய விளையாட்டுச் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடாகி இருந்த ஆசிய கிண்ண தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றி இருப்பதற்கான காரணம் பற்றியே சபை விசாரணை நடத்தவுள்ளது.

இந்த விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கையளிக்கப்படும் என்று உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் 2022 ஆசிய கிண்ணத்தை நடத்துவதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் தவறவிட்டது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஏற்கனவே அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுடனான போட்டிகளை நடத்திய நிலையில் இந்தத் தொடரை நடத்துவதற்கான வழி ஒன்றை இலங்கை கிரிக்கெட் கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தொடரை நடத்துவதற்கான வழியை கண்டறிவதில் இலங்கை கிரிக்கெட் ஏன் தவறியது என்று கேள்வி எழுப்பிய விளையாட்டுத் துறை அமைச்சர், நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள இலங்கை பொருளாதாரத்திற்கு கிரிக்கெட் தொடர்கள் மூலம் தேவையான பணத்தை கொண்டுவர முடியும் என்றும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...