திங்கட்கிழமை முதல் 5 நாட்களும் பாடசாலைகள் நடைபெறும்

- 4 முக்கிய விடயங்களை கருத்திலெடுக்குமாறு அமைச்சு அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (15) முதல் வாரத்தின் 5 நாட்களும் பாடசாலைகளை வழக்கம்போல் மீண்டும் நடாத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று (13) கல்வி அமைச்சர் தலைமையில், கல்வி அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, மாகாண கல்விச் செயலாளர்களை இணைத்து கல்வி அமைச்சில் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

  1. அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் கொண்ட பாடசாலைகளும் எதிர்வரும் திங்ட்கிழமை (15) முதல் வாரத்தின் ஐந்து (05) நாட்களிலும் வழமையான நேரத்தில், அதாவது மு.ப. 7.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை திறக்கப்படும்.
  2. போக்குவரத்து சிரமம் உள்ள பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளுசெய்யுமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துதல்.
  3. திங்கள் (15) முதல் ஆரம்பிக்கும் பாடசாலைகளுக்கு வசதியாக, வாரம் முழுவதும் போக்குவரத்துச் சிரமங்களால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தகுந்த நிவாரணங்களை அதிபர்கள் வழங்க வேண்டும். மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அவ்வாறான நிவாரணம் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அதிபர்களுக்கு அறிவிப்பர்.
  4. எதிர்வரும் 3 மாதங்களில், பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதுடன், இணைப்பாட விதானங்கள் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை பாடசாலை நேரத்தின் பின்னர் மேற்கொள்ளவதற்கும், பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களை தொடர்ச்சியாக மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக, கடந்த ஜூன் மாதம் முதல் பாடசாலைகளை நடாத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், பின்னர் போக்குவரத்து சிரமங்கள் உள்ள பாடசாலைகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் பாடசாலைகள் இடம்பெற்று வந்தன.

இந்நடைமுறை கடந்த வாரம் முதல் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது, வாரத்தின் 5 நாட்களும் பாடசாலைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தற்போது தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...