எமது பாரம்பரிய உணவு பண்பாடு இன்றைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம்

வண. கலாநிதி து. சி. யோசுவா அடிகளார்

எப்போதும் அனர்த்தம் ஒன்று உருவானால் அதைத் தொடர்ந்து உடனடியாக நிவாரணப் பணி தொடர்கிறது. ஆனால் அனர்த்தத்திற்கான காரண காரியங்களை ஆய்வு செய்து தீர்வுகளை முன் வைக்காது அப்படியே மறந்து விடுவது வழக்கமாகியுள்ளது. இலங்கையில் காலத்திற்கு காலம் ஏற்படும் அனைத்து அனர்த்தங்களாலும் அதிகம் பாதிக்கப்படும் ஏழை மக்களின் ஊட்டச்சத்து குறைவு வீதம் அதிகரித்தே செல்கிறது என கிளிநொச்சி காவேரி கலாமன்றத்தின் நிறைவேற்று இயக்குநர் வண. கலாநிதி து. சி. யோசுவா அடிகளார் தினரகன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செவ்வி கண்டவர் இக்பால் அலி

?இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் உணவுப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு எவ்விதமாக சமூக மட்டத்தில் செய்யப்படுகிறது?

எப்போதும் அனர்த்தம் ஒன்று உருவானால் அதைத் தொடர்ந்து உடனடியாக நிவாரணப் பணி தொடர்கிறது.ஆனால் அனர்த்தத்திற்கான காரண காரியங்களை ஆய்வு செய்து தீர்வுகளை முன் வைக்காது அப்படியே மறந்து விடுவது வழக்கமாகியுள்ளது.இலங்கையில் காலத்திற்கு காலம் ஏற்படும் அனைத்து அனர்த்தங்களாலும் அதிகம் பாதிக்கப்படும் ஏழை மக்களின் ஊட்டச்சத்து குறைவு வீதம் அதிகரித்தே செல்கிறது. உணவு மற்றும் ஊட்டச் சத்து குறைவான பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது நிவாரணங்களோடு நின்று விடாது ஆழமான உணவுப் பாதுகாப்பு பண்பாடு ஒன்றை சமூகத்தில் கட்டி எழுப்ப வேண்டிய அவசியம் அவசரமான ஒரு தேவையாக இருப்பதாகவே நான் கருகிறேன்.

ஏனென்றால் இலங்கையில் 60 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் ஏதோ ஒரு வகையில் ஊட்டச் சத்துக் குறை பாடு உடையவர்களாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவுப் பாதுப்புக்கான வதிவிடப் பிரதிநிதி அண்மையிலே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

?எனவே இதற்கான தீர்வு என்ன?

அநேகமாக மக்களுக்கு உடனடியாக ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டும். அதற்கான நிதியைச் சேகரிக்க வேண்டும். உணவு பண்பாடு என்பது இந்த மண்ணுக்குரியது. ஓவ்வொரு மனிதர்களும் அவரவர் சூழலுக்கு ஏற்பவும் தேக ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஒரு உணவுப் பண்பாடு இருக்கிறது. அதை தொடர்ச்சியாக தக்க வைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை ஒருவரும் இதுவரைக்கும் முறைப்படி செய்ய முன்வருவதில்லை. ஒவ்வொரு அனர்த்தம் வருகிற பொழுதும் ஊட்டச் சத்து குறித்துப் பேசப்படுவதும் உணவு பற்றாக்குறை பற்றிப் பேசப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது இன்றைய பொருளாதார பிரச்சினையில் அதிகமாக பேசப்படுகிறது, உணரப்படுகிறது. ஏனென்றால் பல கிராமங்களில் மக்கள் நாளாந்த சாப்பிடும் உணவின் அளவைக் குறைத்திருக்கிறார்கள். ஊட்டச் சத்துக்குரிய உணவுகளையும் குறைத்திருக்கிறார்கள். இதனால் நீண்ட கால அடிப்படையில் இளம் சமூகம் மிக மோசமான ஊட்டசத்துக் குறைபாடுடைய சமூகமாக மாறுவதற்கான வாய்ப்பு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பு, பண்பாடு என்று கூறினீர்கள்.அது தொடர்பில் சிறு விளக்கம்?

உணவு என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் வேறுபட்டது. நாம் அனைவரும் இலங்கையர் என்ற பொது அடையாளத்திற்குள் இருந்தாலும் கூட இலங்கையில் அனைத்து மக்கள் மத்தியிலும் பொதுவான பல உணவு முறைமைகள் இருந்தாலும் குறிப்பிட்ட சில உணவு முறைமைகள் குறிப்பிட்ட சமூகத்திற்கே உரித்தானதாக இன்று வரை உணரப்படுகிறது. அது ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய சூழலியல் சார்ந்த மரபு சார்ந்த, உற்பத்தி சார்ந்த விடயங்களோடு தொடர்புபட்டதாக இருக்கும். ஆனால் உணவுப் பண்பாடு கேள்விக்கு மறைமுகமாக ஒரு விடையைக் கொடுக்க வேண்டுமானால் ஒருவர் வாழும் பிரதேசத்தில் அவருக்கு எதுவாக கிடைக்க கூடியதை எடுத்து அடுத்தவர்களுடைய உணவுக்காகப் பயன்படுத்துவதாகும். வடமாகாணத்தில் நிறைய பனை மரங்கள் இருக்கின்றன. பனை மரங்கள் அதிக இருப்பதால் வட மாகாண சமூகத்தின் மத்தியிலே அதிகமான உணவாக ஒடியல் அல்லது புளுக்கொடியலாகும். இது நீண்ட கால உணவு மரபு. ஆனால் இப்பொழுது சந்தையில் இருக்கக் கூடிய கோதுமை மாவினுடைய வரவிற்குப் பின்பு மிக இலகுவாகவும் மலிவாகவும் நல்ல ஊட்டச் சத்து நிறைந்த அந்த பனை விதைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.

ஆனால் அவைகளை எடுத்து உணவாக்கிக் கொள்வதற்கு இந்த சமூகம் மறந்து விடுகிறது. உணவுப் பண்பாடு என்பது அப்படித்தான்.

சூழலில் இருக்கக் கூடிய அந்த வளத்தை எடுத்து அதைத் தனக்கேற்ற உணவாக மாற்றிக் கொள்வதுதான் உணவுப் பண்பாடு. ஏன் இந்தப் பண்பாட்டில் இருந்து மக்கள் மாறுகின்றார்கள் என்று சொல்வோமாயின், சமகால வியாபார மூலோபாயம் என்று கூறுவார்கள். அதாவது சர்வதேச வியாபார மூலோபாயம் என்பது உணவுப் பண்பாட்டின் தனித்துவங்களைச் சிதைப்பதுதான் அதனுடைய பிரதான நோக்கம். தனித்துவமான உணவுப் பண்பாட்டை சிதைத்தால் தான் உலகளாவிய வியாபார உத்திகளை அவர்கள் கையாள முடியும். தங்களுடைய வியாபாரப் பொருட்களைக் கொண்டு வந்து இவ்விதமான ஏழை நாடுகளிலுள்ள மக்களுக்குக் கொடுத்து அவர்கள் தங்களுடைய வியாபாரத்தைச் செய்து கொள்ள முடியும் என்பதைத் சர்வதேச மூலோபாயம் எடுத்தியம்புகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். அவர்கள் வெற்றியடைந்துள்ளார்கள். ஏனென்றால் பொதுவான அனைத்து இன சமூக மக்களுமே நாம் நமது சூழலில் கிடைக்கக் கூடிய உற்பத்திப் பொருட்களை படிப்படியாக விட்டது மட்டுமல்ல. நாம் ஏதோ ஒரு வகையில் இறக்குமதி சார்ந்த உணவுப் பொருட்களுக்கு மாறிச் செல்லுகின்ற பழக்கத்திற்கு நம்மை நாம்அடிமைப்படுத்திக் கொண்டதினால் இன்று முற்றுமுழுதாக அவைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் நாங்கள் மரபான உணவு முறைகளை விட்டுவிட்டோம். இன்றை இளம் சமூகத்திற்கு புளுக்கொடியலில் பிட்டு அவிக்கலாம். ஒடியல் மாவில் நாங்கள களி செய்யலாம் என்று தெரியாது நாங்கள் கண தூரம் வெளியே வந்திருக்கிறோம். அதே நேரத்தில் கோதுமை இறக்குமதி செய்வதற்கு டொலருமில்லை. எங்களுடைய மண்ணிலே பனங் கொட்டைகளை எடுத்து அவைகளை பதியும் போட்டு கிழங்காக்கி அதை மாவாக்குவதற்கான அந்த அறிவும் ஆற்றலுமில்லை. இது மிகக் கவனமாக திட்டம் வகுக்கப்பட்டு நம்முடைய உணவுப் பண்பாட்டில் இருந்து நாங்கள் அந்நியப்பட்டு ஏதோ ஒரு வகையில் அவர்களிடம் தங்கியிருக்கக் கூடிய நிலைக்கு உட்பட்டிருக்கிறோம். இன்று அவர்கள் கோதுமை மா தந்தால் நாங்கள் சாப்பிடலாம். அதன் விலை உயர்ந்து விட்டது. அதற்கு நாங்கள் பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிட வேண்டிய நிலை வந்து விட்டது. இது தான் உணவுப் பண்பாடு.

இரவிலே சோற்று பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விடுவார்கள். அது காலையில் எழும்புகிற பொழுது அது பழஞ் சோற்றுக் கஞ்சி என்று சொல்வார்கள். ஆனால் பழஞ் சோற்றுக் கஞ்சியை குடிப்பவர்கள் வறுமைக்குட்பட்ட குடும்பங்களாகவும் பாவப்பட்ட மனிதர்களாகவும் பார்க்கின்ற பார்வை இருக்கிறது.கஞ்சி குடிக்கிறவரை ஐயோ! பாவம் கஞ்சி குடிக்கிறாரே என்று அவருக்கு கடையில் அரை இறாத்தல் பாணை வாங்கி வந்து கொடுக்கின்றோம். கஞ்சி ஒரு மோசமான உணவாகவும் பாண் ஒரு ஊட்டச் சத்திமிக்க உணவாகவும் நாங்கள் பார்க்கிறோம். ஆனால் உண்மை என்ன? சோற்றுக் கஞ்சியில் இருக்கும் ஊட்டச் சத்து ஒரு ஐந்து விகிதம் கூட நீங்கள் சாப்பிடும்

பாணில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பலருக்குத் தெரிந்தும் கூட ஏதோ ஒரு வகையில் அவ்விதமான உணவுக்கு நாங்கள் பழக்கப்பட்டு விட்டோம். பாண் சாப்பிடுவது அநியாயம் அல்லது ஒரு குற்றம் என்று சொல்லவரவில்லை. அது ஒரு உற்பத்திப் பொருள் வாங்கிச் சாப்பிடுங்கள். ஆனால் கஞ்சியை ஒரு பாவப்பட்டப் பொருளாக அதனை வாங்கிச் சாப்பிடுவது ஒரு பரிதாபம் என நினைக்குமளவுக்கு நாம் உணவுப் பண்பாட்டு விடயங்களிலிருந்து வெளியே வருகிறோம்.

அதில் இருந்து நம்மை ஒதுக்கி கொள்ளுவதுதான் சர்வதேசத்தின் மூலோபாயம். இவையெல்லாம் எங்களுடைய சூழலில் இலவசமாகக் கிடைக்கிறது. மலிவாகக் கிடைக்கிறது.

இவ்வாறான உணவுப் பண்பாட்டை கட்டி எழுப்புவதற்கு சமூகத்திற்கு மத்தியிலேயே செய்யப்படுகின்ற விழிப்புணர்வு சார்ந்த பணிகள் யாவை?

இது குறித்து பலரும் பல்வேறு நிலைகளில் கதைத்து விட்டுப் போனாலும் செயற்பாட்டுச் சார்ந்த விடயத்திலே எங்களுடைய அமைப்பு இரண்டு முக்கியமான பணிகளைச் செய்கின்றன. ஒன்று உணவுப் பண்பாட்டு முறைமைகளை மீள் நிறுத்துதல், அதாவது 'ஒரு அனுபவம் சார்ந்த பகிர்தலுக்கான அழைப்பு'. 'சுவை அவை' என்ற ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்தையும் முன் வைத்திருக்கின்றோம். 'சுவை அவை' என்பதன் நோக்கம் என்னவென்றால் இப்பொழுது 63 ஆவது 'சுவை அவை' நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாதத்தில் இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் நாங்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுடைய காணியில் என்ன வகையிலான உணவு உற்பத்திகள் இருக்கின்றன. என்ன வகையான நாட்டுக் கீரைகள் நாட்டு மரக்கறி வகைகள் இருக்கின்றன. உபபொருட்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். இந்தக் கீரையை வைத்து என்ன உணவு செய்யலாம் என்று வீட்டிலுள்ள முதியவர்களிடம் கேட்போம். இதையும் விதையும் இணைத்தால் என்ன உணவு செய்யலாம் என்று கேட்கின்ற சமயம் வீட்டிலுள்ளவர்கள் அதை எவ்வாறு செய்யலாம் என்று விளக்கமளிப்பார்கள். ஏன் இதைச் செய்யவில்லை என்றால் ஐயோ இதைச் செய்ய நேரமில்லை. இதனால் அதற்கு நாங்கள் பழக்கப்பட்டு விட்டோம் என்று கூறுவார்கள். பிள்ளைகள், அயலவர்கள் மத்தியில் பண்பாடாக, மரபாக பின்பற்றி வந்த உணவின் செய் முறைகளைக் காட்டி அதனைச் செய்து அவர்களோடு சேர்ந்து உட்கொண்டு வருகின்றோம். உணவு சார்ந்த பழங்கதைகள் அவர்கள் மத்தியில் இருக்கின்றன. பாரம்பரியமாக சொல்லப்பட்ட உணவு சார்ந்த கதைகள் நிறைய உள்ளன. அவ்வாறான கதைகளை அவர்களின் மூலம் சொல்ல வைத்து கிட்டத் தட்ட ஒரு கொண்டாட்ட நிகழ்வாக நாம் அதை நிறைவு செய்வோம்.

பின்பு அவர்களோடு இருந்து கதைத்து அவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்கின்ற போது சிறுவர் முதல் பெரியோர்கள் வரை சொல்லும் அபிப்பிராயங்கள் கேட்பதற்கு ஆச்சரியமானதாக இருக்கும். நாங்கள் தேவையற்ற உணவு வகைகளுக்கு அடிமைப்பட்டுப் போகிறோம். பாரதூரமான பதில்களை நாங்கள் எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஆகவே இது உணவு விழிப்புணர்வு சார்ந்த முதலாவது பணி. இது இப்பொழுது 63 ஆவது 'சுவை அவை' நடைபெற்று இருக்கிறது. இது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, அநுராதபுரம், மட்டக்களப்பு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் 'சுவை அவை' நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றுள்ளது. இப்பொழுதும் இந்த உன்னதமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம்.

உணவுப் பண்பாட்டை மீள் நிறுத்தம் விடயத்தில் இரண்டாவது அம்சம்,மரபு சார்ந்த உணவுத் தாவரங்களைப் பாதுகாத்தல் ஆகும். ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு மரங்கள் இருக்கின்றன. எமது நாட்டுக் கத்தரிக்காயில் பல்வேறு வகையான கத்தரிக்காய்கள் இருக்கின்றன. சுண்டங் கத்தரி, கண்டங் கத்தரி, குண்டு கத்தரிக்காய் என்று சொல்லுவார்கள். இதை வீட்டில் வளர்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் அதற்கு தண்ணீர் ஊற்றி, பசளை போட்டு மருந்து அடிக்க வேண்டிய தேவை இல்லை. அது ஒரு இடத்தில் தன்னுடைய பாட்டில் வளர்ந்து காய்க்கும். அவற்றைப் பறித்துச் சமைக்கலாம். மரபு சார்ந்த மரக்கறி வகைகளை கீரை வகைகளை அடையாளப்படுத்தினால் இலங்கையில் 42 வகையிலான கீரைகள் மற்றும் நாட்டு மரக்கறி வகைகள் உள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவைகளைப் பயன்படுத்துவதுமில்லை. அவைகளைக் கவனிக்காமையினால் அவைகள் படிப்படியாக அழிந்தும் வருகின்றது. இவைகளை மீண்டும் நாட்டுவதற்கு அவசியமான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இதன் முதல் கட்டமாக நாட்டு விதைககைளப் பாதுக்கும் நாட்டு விதை வங்கிகளை ஆரம்பித்து சமூக மட்டத்தில் ஊக்குவித்து மக்களை வழி நடத்துகிறோம்.

கிராமங்களில் முதியோர், இளம் விவசாயிகளுக்கு கொத்தவரை தொடர்பில் எடுத்து கூறுவோம். போஞ்சியினுடைய தாய் தான் இந்த கொத்தவரை. கொத்தவரை, இது மூதாதையர் இனம். இது மிகவும் உடலுக்கு உகந்த ஆரோக்கியமான உணவு ஊட்டச் சக்திமிக்கது. இது தன்னுடைய பாட்டுக்கு காய்கும், வளரும். அந்த கொத்தவரையை நாங்கள் இழந்து விட்டோம். இப்பொழுது அதன் விதையை எடுத்து மக்களுக்கு கொடுத்து செய்கை பண்ணச் சொல்லி வருகின்றோம். ஏன் நாங்கள் நாட்டு விதைகளை இன்னும் வலியுறுத்தி வருகிறோம் என்றால் இப்பொழுது விவசாயம் செய்பவர்கள் விவசாயத்தை கை விட்டுவிட்டு செல்வதற்கான பல ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

நமது நாட்டில் இப்பொழுது பசளை இல்லை மண்ணெண்ணெய் இல்லை எனக் கூறுகின்றனர் உண்மையிலேயே விசாயம் செய்ய முடியாது. இந்த இரண்டு காரணங்களும் உண்மைதான்.

ஆனால் இந்த நாட்டு விதைகளை எடுத்துச் செய்கை பண்ணும் போது பெரியளவில் மற்றப் பயிர்களுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் தேவை இல்லை. பசளையும் பெரியளவில் தேவையில்லை. ஆகவே நாட்டு விதைகளை பாதுகாத்தல், பராமரித்தல் ஊக்குவித்தல் முக்கிய விடயமாகும். நாட்டு விதையில் இருக்கக் கூடிய நல்ல விடயம் என்னவென்றால் மண் செத்துக் கொண்டிருக்கின்ற நிலையிலும் கூட அந்த விதையின் வீரியம் ஏதோ ஒரு வகையில் போராடி அது எழுந்து நிற்கும். ஆகவே நாட்டு விதைகளைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் அவர்களை ஊக்குவிப்பதற்கான முக்கிய காரணம் பசளை இல்லாத பட்சத்திலும் இந்த தாவரங்கள் வளர்ந்து வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது பற்றிய விழிப்புணர்வுகளைச் செய்து வருகிறோம். இன்னும் ஆழமாகச் செய்யப்பட வேண்டி இருக்கிறது எனக் கருதுகின்றேன்.

சமூகத்தில் உணவுப் பண்பாட்டை நிலை நிறுத்துதல், சமூகத்தில் அது எப்படி பின்பற்றப்படுகிறது?

கடிமான பணி. ஏனென்றால் நாங்கள் விரும்பி எங்களுடைய உணவுப் பண்பாட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் அல்லர். ஏதோ ஒரு வகையில் சர்வதேச வியாபாரம், உலகளாவிய உற்பத்திப் பொருட்களை எமது பிரதேசத்திற்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தல் ஆகும். அவர்கள் முதலாவது எங்களுடைய மன நிலையிலே மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்கு முக்கியமானது விளம்பரங்கள் ஆகும். நாம் விளம்பரங்களைப் பார்க்கும் போது விளம்பரங்களிலே காட்சிப்படுத்தக்கப்படுகிற உணவுகளால் முதலாவது பாதிக்கப்படுவது எமது பிள்ளைகளே. சிறு சிறு குழந்தைகள் அவர்களது மனதிலே அதில் காட்சிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் அவர்களது அடி மனதிலே பதிந்து விடுகிறது.

அவர்களுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த உணவு தான் வேண்டும் என்று சொல்வார்கள்.பின்பு அவற்றை சுவைக்கிற போது அவர்களுடைய மனதிலே காட்சிப்படுத்தப்பட்ட விடயங்கள் பதிவாகின்றன.


Add new comment

Or log in with...