மற்றுமொரு நாட்டில் தஞ்சமடையும் வரை கோட்டாபய தாய்லாந்தில் இருப்பார்

- தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவிப்பு
- ஏற்கனவே உள்ள வீசா ஒப்பந்தப்படி 90 நாட்கள் தங்க முடியும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றுமொரு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என, தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்நாட்டில் தங்கியிருக்க வழங்கப்பட்ட கால எல்லை நிறைவடையும் நிலையில், இன்று (11) அவர் தாய்லாந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.

தாய்லாந்து அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்சவை இன்று வரை நாட்டில் தங்குவதற்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில், தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனீ சங்ரத் (Tanee Sangrat) விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், தற்போதைய இலங்கை அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷச தாய்லாந்துக்கு வர அனுமதி கோரியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

 

 

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை கருத்திற்கொண்டு இக்கோரிக்கை கருத்திலெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்ற வகையில், தாய்லாந்து மற்றும் இலங்கை இடையே 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வீசா விலக்கு ஒப்பந்தத்தின்படி, கோட்டாபய  ராஜபக்‌ஷவுக்கு வீசா இன்றி 90 நாட்களுக்கு தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும். அவரது எதிர்கால பயணத்தை அடிப்படையாகக் கொண்டு, இது தற்காலிக தங்குதலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் கோட்டாபய ராஜபக்‌ஷ தமது நாட்டிடம் அரசியல் தஞ்சம் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...