ரஷ்ய ஆயுத கொள்வனவுக்கு எதிரான தடை; இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்களிப்பு

ரஷ்யாவிடமிருந்து இராணுவ உதவி பெறும் நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் இராணுவ உதவித் தடையில் இருந்து இந்தியாவுக்கு பைடன் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. கலிபோர்னியா மாநில ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் சபை உறுப்பினரான ரோகன்னா கொண்டு வந்த திருத்தத்துக்கு அமைய இவ்விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 14ம் திகதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்ட இத்திருத்தத்துக்கு முழு ஆதரவு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் எதிரிகளைத் தண்டிப்பதற்காகவே இச்சட்டம் இருப்பதாகவும் அமெரிக்காவின் நண்பர்களைத் தண்டிப்பதற்கு அல்ல என்று பாதுகாப்புத்துறை விமர்சகர்களான ஹூசைன் அக்கானி மற்றும் அபர்ணா பாண்டே ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த நல்லெண்ண வெளிப்பாடு இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வளர்க்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா 21 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்துள்ளது. இந்தியாவின் இராணுவ நவீனமயமாக்கல் மெதுவாக நிகழ்ந்து வருகின்ற போதிலும் இந்தியாவை தன் நெருக்கமான தோழனாகவே அமெரிக்கா கருதி வருகிறது.

இதேசமயம் கடந்த 2018ம் ஆண்டு 5.43 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்வனவு செய்திருந்தது. ரஷ்ய - இந்திய இராஜதந்திர உறவின் 75வது ஆண்டை முன்னிட்டு இக்கொள்வனவு இடம்பெற்றதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதுவர் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...