நலமான வாழ்வைக் கொடுப்பது உறுதியான நம்பிக்கையே

நலமான வாழ்வுதனை கடவுள் எவ்வளவு தூரம் நம் வாழ்வில் பிரதிபலிக்கிறார் என்பதை முதுபெரும் தந்தையாகிய ஆபிரகாமின் வாழ்விலிருந்து கடவுள் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். நம்பிக்கையால் யாவரும் நலமடைய முடியும் என்பதே கடந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு கொடுக்கும் நம்பிக்கை கடந்த ஞாயிறு வழிபாடு நம்பிக்கையால் ஒருவர் நலமடைகிறார் என்ற  செய்தியை வலியுறுத்தி நம் வாழ்வைச் சிந்தித்து பார்க்க அழைப்பு விடுக்கிறது. நாம் வாழும் இந்த சமூகம் பல்வேறு பின்புலங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதன் மையம் நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையின் அடையாளமாய் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.

 எந்த துறையை எடுத்தாலும் எந்த வாழ்வியல் நிகழ்வைக் கண்ணோக்கினாலும் அவையெல்லாம் அன்றாட பேசு பொருளாய் மாற்றப்படுவதற்கு காரணமே அதில் காணப்படும் நம்பிக்கைதான். அதைத்தான் கடந்த  ஞாயிறு வழிபாடு நமக்கு எடுத்துரைக்கின்றது.

முதல் வாசகமானது,

எவ்வாறு இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வில் கடவுள் கொடுத்த வாக்குறுதியின் பின்னணியில் தங்களிடையே காணப்படும் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்கள் என்பதை கூறுகிறது.

நீங்கள் விடுதலையடைந்தது, பலி ஒப்புக்கொடுத்தது, ஒருமித்து உடன்பட்டது இவையனைத்தும் உங்களிடத்தில் விளங்கிய நம்பிக்கையால் உருவாகிய நலமான செயல்கள் என்பதை கடவுள் அம் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அதையே வாக்குறுதியாக வழங்கி இவற்றை தலைமுறைதோறும் பறைசாற்ற பணிப்பதை எடுத்தரைக்கிறது சாலமோனின் ஞானநூல்.

இரண்டாம் வாசகத்தில்,

நலமான வாழ்வுதனை கடவுள் எவ்வளவு தூரம் நம் வாழ்வில் பிரதிபலிக்கிறார் என்பதை முதுபெரும் தந்தையாகிய ஆபிரகாமின் வாழ்விலிருந்து கடவுள் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

ஆபிரகாம் தன் வாழ்வு முழுவதும் எவ்வாறு நம்பிக்கையில் ஆழப்பட்டு தன் நலமான ஆசீரைப் பெற்றுக்கொண்டார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். ஒருவர் எந்தளவு கடவுள்மீது நம்பிக்கை வைக்கிறாரோ அந்தளவிற்கு அவரின் வாழ்வு நலன்களால் நிரப்பப்படும் என்பதற்கு ஆபிரகாம் சிறந்த உதாரணம்.

நற்செய்தியில்,

ஆபிரகாமிடத்தில் விளங்கிய நம்பிக்கை வாழ்வும் முதல் வாசகத்தில் தென்படுகின்ற இஸ்ரயேல் மக்களின் வாழ்வுநிலையும் நம்மில் எதிரொலிக்க எதார்த்தமான வழிகளை, வாழ்வியல் சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கிறது. இயேசுவின் இந்த போதனை நம்பிக்கையாளர்களாகிய நம் அனைவருக்கும் நலமான வாழ்வைக் கொடுக்கின்றன என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார் லூக்கா நற்செய்தியாளர்.

எவ்வாறு புரிந்து கொள்வது?

இயேசு இன்று நம்முன் கொடுக்கின்ற உவமையின் பின்னணியில் சிந்திக்கின்ற போது ஒரு பணியாள் தன் வாழ்வில் எந்தளவு நம்பிக்கைக்குரியவனாக இருக்க வேண்டுமென்பதில் தொடங்கும் இயேசு வார்த்தையில், நம்புவதால் உன் வாழ்வு நலம் காணும், நலன்களையே அனுபவிப்பாய் என்கிற ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறார்.அதற்கு மூன்று வகையான வழிமுறைகளையும் தருகிறார். யார் ஒருவர்; தன் வாழ்வில் முழுமையான ஆசீரை பெற வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரோ அவர் என்ன செய்யலாம் இயேசு காட்டும் வழியில் பயணித்து அதற்கான ஆசீரை தமதாக்கலாம்.

நம்பிக்கையால் யாவரும் நலமடைய முடியும் என்பதே கடந்த ஞாயிறு வாசகங்கள் கொடுக்கும் நம்பிக்கை:

முழுமையான நம்பிக்கை என்பது நாம் நினைப்பது நடக்கும் என்ற எதிர்நோக்கு (எபி11:1). அதாவது திருத்தூதர்களைப் பார்த்து இயேசு என்ன சொல்கிறார்: சிறு மந்தையே அஞ்சாதே. அப்படியென்றால்;, நீங்கள் விரும்பும் வாழ்வை எவ்வாறு பெற்றுக்கொள்வீர் அல்லது எப்படி கிடைக்கும் என்று யாராவது கேட்டால், அது உங்களிடத்தில் வெளிப்படும் முழுமையான நம்பிக்கையால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதுதான் 'நலமான வாழ்வாய்' நமக்கு கிடைக்கிறது. இதைத்தான் திபா 33:20சொல்கிறது: "நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும், கேடயமும் ஆவார்". இப்படிப்பட்ட விசுவாசப் பார்வைதான் நம்மை முழுமையான நம்பிக்கை வாழ்வுக்குள் அழைத்து செல்லும்.

விழிப்பு நிலை அல்லது விழிப்பாய் இருத்தல்:

கடவுள் மீது நாம் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கை நம் வாழ்வில் பிரதிபலித்து நலத்தையும், வளத்தையும், வரத்தையும் பெற்று மகிழ வேண்டுமென்றால் நம்பிக்கையின் அடுத்த நிலையான அத்தகு நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள தேவையான விழிப்புநிலை நமக்கு தேவை.  நலமான வாழ்வு எனக்கு வேண்டுமென்றால் நிச்சயமான நாம் விழிப்போடு இருக்க வேண்டும். எப்படி? நலமாய் இருக்க வேண்டிய என் வாழ்வு நலமற்றதாய் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதே விழிப்பு நிலை. உதாரணமாக, நற்செய்தியில் வரும் உவமையில், வீட்டுப்பணியாளர் பொறுப்பில் உள்ளவர் தன் தலைவர் எந்த நேரத்திலும் வருவார் என்ற விழிப்பு நிலையில் இல்லாததால்தான் அவர் தன் விருப்பப்படி வாழ்கிறார். விழிப்பு நிலை இல்லாத போது நம் நம்பிக்கையும் அலையில் சிக்கி சிதையும் படகாகத்தான் இருக்கும். அத்தகைய நிலை நம்மில் உருவாகாமல் இருக்கவே இயேசு விழிப்பாய் இருங்கள். எல்லையற்ற நலத்தினைப் பெறுங்கள் என்று பறைசாற்றுகிறார்.முழுமையான நம்பிக்கையும், விழிப்பாய் இருக்கும் நிலையும், பொறுப்போடு பணிவிடை புரிதலும் நம்மில் இருக்கும் நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தி நலமான வாழ்வைப் பெற்றிட உதவட்டும். இறைவனே நம் வாழ்வின் உற்ற துணை என்னும் எண்ணத்தை உருவாக்கட்டும்.

அருட்பணி  அ.மாணிக்கம்


Add new comment

Or log in with...