அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்க பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ ஏற்பாடு

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்காக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜ்பக்‌ஷ முன்வந்துள்ளார். நன்னீர் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பத்தினரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் இம்மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் 160 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்வு அவரது தலைமையில் அண்மையில் சூரியவெவ பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அங்கு அவர் பத்தரை இலட்சம் ரூபா பெறுமதியான கண்ணாடிஇழைப் படகுகளை மீன்பிடித் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

வெதிவேவ சம்பத் மீன்பிடிச் சங்கம், ஆடியன்கம கிராம மீன்பிடிச் சங்கம், கிரிவாடிய மீன்பிடிச் சங்கம், மீகஹஜபுர மீன்பிடிச் சங்கம், மகாவலி கடஅர மீன்பிடிச் சங்கம் ஆகியவற்றுக்கே இப்படகுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

'கிராமத்துடனான கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கிராமத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே கண்ணாடியிழைப் படகுகள் விநியோகிக்கப்பட்டதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

தென்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ் .வி .பி ஆனந்தவினால் ஒதுக்கப்பட்ட நிதியும் இப்படகுகள் கொள்வனவுக்கென அளிக்கப்பட்டதோடு அவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

அங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வசிக்கும் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தங்களுக்கு இந்த 'பைபர்' படகுகளை வழங்கியது தொடர்பாக அம்மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சூரியவெவ பிரதேச செயலாளர் காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த பைபர் படகுகளை வழங்கும் நிகழ்வில் நீர்வாழ் உயிரினங்கள் திணைக்களத்தின் பரிந்துரையின் பேரிலேயே படகுகள் வழங்கப்பட்டன.


Add new comment

Or log in with...