ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மக்களை அவதானமாக இருக்க வேண்டுகோள்

சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை மற்றும் அரநாயக்க பிரதேச செயலக பிரிவுகள், மாத்தறை மாவட்டத்தின் வஸ்கடுவ பிரதேச செயலக பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரதேச செயலக பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, கலவான, கஹவத்தை, குருவிட்ட மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் சில பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50கிலோ மீட்டர் வரை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.


Add new comment

Or log in with...