200 மீற்றரிலும் தொம்சன் தங்கம்

ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை எலைன் தொம்சன் ஹெராஹ் ஒலிம்பிக் போன்றே பொதுநலவாயப் போட்டியிலும் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்றார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலமே அவர் மீண்டும் இந்த சாதனையை செய்து காட்டியுள்ளார். கடந்த புதன்கிழமை நடந்த 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் 28 வயதான தொம்சன் தங்கம் வென்றிருந்தார்.

இதில் அவர் 200 மீற்றர் தூரத்தை 20.02 விநாடிகளில் பூர்த்தி செய்து முதலிடத்தைப் பிடித்தார். இது புதிய போட்டிச் சாதனையாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 22.51 விநாடிகளில் போட்டித் தூரத்தை முடித்த நைஜீரியாவின் பேவர் ஒபிலி வெள்ளிப் பதக்கத்தையும் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற கிறிஸ்டின் ம்போமா 22.80 விநாடிகளில் போட்டித் தூரத்தை முடித்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றார்.

பொதுநலவாய போட்டிகளில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் தங்கம் வென்ற ஐந்தாவது பெண்ணாகவும் தொம்சன் பதிவானார். இதில் 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் அவர் பங்கேற்கும் நிலையில் மூன்றாவது தங்கத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...