பெற்றோருடன் பெரஹரா பார்க்க வந்த சிறுவனை கடத்தியதாக தெரிவிக்கப்படும் நபர் கைது

- தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்
- பாதுகாப்பு தொடர்பில் பிள்ளைகளை அறிவுறுத்துங்கள்

பெற்றோருடன் கண்டி பெரஹரா பார்க்க வந்த சிறுவனை கொழும்புக்கு கடத்தி வந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பயணித்த நபர் ஒருவருடன் சென்ற சிறுவன் பயமுற்ற நிலையிலும், சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்டதை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர், மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இது தொடர்பில் அறிவித்ததையடுத்து, மஹரகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் மஹரகம புகையிரத நிலையத்தில் வைத்து, அவரை கைது செய்துள்ளதோடு குறித்த சிறுவனையும் மீட்டுள்ளனர்.

இதன்போது மேற்கொண்ட விசாரணையில் குறித்த 9 வயதான சிறுவன் மயிலாபிட்டிய, தலவத்து ஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கடந்த புதன்கிழமை (03) தனது பெற்றோருடன் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பெரஹராவை பார்ப்பதற்காக சென்ற வேளையில், குறித்த சந்தேகநபர் சிறுவரின் பெற்றோருக்கு தெரியாமல் சிறுவனை அழைத்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

சந்தேகபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பெரஹராவுக்கான முகமூடி நடன ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக கொழும்புக்கு வந்ததாகவும், சிறுவனுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தருவதற்காக அவரை அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையில் சிறுவன் காணாமல் போனமை தொடரில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அறிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்து சிறுவனை அழைத்து வந்த சந்தேகநபரை மஹரக பொலிசார் கைது செய்துள்ளனர். 30 வயதான குறித்த சந்தேகநபர் பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றவாளிகளால் இவ்வாறு பல்வேறு வகைகளில், பல்வேறு நோக்கங்களுக்காக சிறுவர்களை ஏமாற்றி அழைத்துச் செல்ல முடியும் எனவும், அவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களை அதற்காக பயன்படுத்துகின்றார்கள் என்பதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்ற விழாக்கள் அல்லது பொது இடங்களுக்குச் செல்லும்போது, பெற்றோர் தமது தமது குழந்தைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதோடு மிகவும் அவதானத்துடனும் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ள பொலிசார், தங்களது பாதுகாப்புத் தொடர்பில் சிறுவர்களுக்கு விளிப்புணர்வை வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...