நள்ளிரவு முதல் சாதாரண சேவை பஸ் கட்டணங்கள் 11.14% இனால் குறைப்பு

- குறைந்தபட்ச கட்டணம் ரூ. 38 இலிருந்து 34 ஆக குறைப்பு

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண சேவை பஸ் கட்டணங்களை 11.14% இனால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 38 இலிருந்து ரூ. 34 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. (கட்டண பட்டியல் இணைப்பு)

இந்த கட்டண திருத்தமானது தனியார் மற்றும் இ.போ.ச. ஆகிய இரண்டு பஸ்களினதும் சாதாரண பஸ் சேவைகளுக்கு பொருந்துமென, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (04) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த கட்டண திருத்தமானது இரண்டு காரணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அந்த வகையில் கொவிட் தொற்று காரணமாக ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்ற வேண்டுமென சுகாதாரப் பிரிவினால் அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, சொகுசு, அதி சொகுசு பஸ்களைப் போன்று, சாதாரண பஸ் சேவைகளிலும் பயணிகள் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து செய்ய வேண்டிய நிலைய ஏற்பட்டது.

இதன்போது பஸ் தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்வதிலான சிரமங்களை கருத்தில் கொண்டு, 2020 நவம்பர் 11ஆம் திகதி சாதார பஸ் கட்டணங்கள் 20% ஆல் அதிகரிக்கப்பட்டது.

தற்போது குறித்த நடைமுறை தற்போது இல்லாத நிலையில், பயணிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, குறித்த 20% இலிருந்து பஸ் கட்டணத்தை 10%ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டர்.

இரண்டாவது விடயம், அண்மையில் டீசல் விலை ரூ. 10 இனால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கீட்டின்படி, பஸ் கட்டணங்களை 1.14% இனால் குறைக்க வேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு திருத்தங்களையும் கருத்தில் கொண்டு, சாதாரண சேவை பஸ் கட்டணங்களை 11.14% இனால் குறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து தனியார் மற்றும் இ.போ.ச. சாதாரண மாகாணங்களுக்கு இடையேயான பஸ்கள், கிராமப்புறங்களில் இயங்கும் கெமி சரிய சேவை, காலை மற்றும் இரவு நிசி சரிய சேவை, பாடசாலை மாணவர்களுக்கான சிசு சரிய மற்றும் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பொது பாடசாலை சேவைகளில் இந்தக் கட்டணம் குறைப்பு அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இதன்படி இன்று நள்ளிரவு முதல்

  • சாதாரண சேவை பஸ் கட்டணங்கள் 11.14% ஆல் குறைக்கப்படும்
  • குறைந்தபட்ச கட்டணம் ரூ. 38 இல் இருந்து ரூ. 34 ஆக குறைக்கப்படும்
  • கட்டணக் குறைப்பு 350 கட்டணங்களில் நடைமுறைப்படுத்தப்படும்
  • 350ஆவது கட்டணம் ரூ. 2,882 இலிருந்து ரூ. 2,611 ஆக குறைக்கப்படும்
  • இந்தக் கட்டணங்களை பஸ்களில் காட்சிப்படுத்துவது கட்டாயம்
  • பஸ் கட்டண குறைப்பு நடைமுறையாவதை கண்காணிக்க அதிகாரிகள் கடமையில்

PDF File: 

Add new comment

Or log in with...