நேற்று கைதான YouTube பிரபலம் 'ரெட்டா' இன்று விடுதலை

நேற்றைய தினம் (01) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளரும், YouTube பிரபலமுமான 'ரெட்டா' என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மே 21ஆம் திகதி கொழும்பு, இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக ரத்திந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்றையதினம் (02) கோட்டை நீதவான் நீதிமன்றம், அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரை ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், பிணைத் தொகையை பின்னர் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

கொம்பனித் தெரு பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (02) நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நேற்று (01) கைதான அவரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

அத்துடன், அவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் ஏற்கனவே வெளிநாட்டுப் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...