ஜனாதிபதி இல்ல தீ வைப்பு சம்பவம்; கைதான மூவரில் இருவருக்கு பிணை

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் பிளவர் வீதியில் உள்ள தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைதான மூவரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய நபருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று சந்தேகநபர்களும் இன்றையதினம் (02) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு ஆஜராகிய மூன்று சந்தேகநபர்களில் 22 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஓகஸட்ட 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சந்தேகநபர்கள் ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டின் வளாகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறிப்பிட்ட தொகை பணமும் கிருமிநீக்கும் திரவ போத்தல் ஒன்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சம்பவதினத்தன்று பெருமளவான மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், சந்தேகநபர்கள் மூவரையும் இராணுவ அதிகாரிகள் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், இதன்போது முறையற்ற வகையில் செல்வாக்குச் செலுத்தி அவர்களை பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டதாக CID யினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன் பின்னர், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் சந்தேகநபர்களை கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது நீதிமன்றில் தெரிவித்தனர்.

இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்ட 18 வயதுக்குட்பட்ட இரு சந்தேகநபர்கள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் திலிண கமகே, சந்தேகநபர்கள் இருவர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல சத்தியக்கடதாசிகளை பரிசீலித்த பின்னர், தலா ரூ. 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...