அரச அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை சுற்றறிக்கை உடன் இரத்து

- அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அலுவலகங்கள் திறப்பு

ஜூன் மாதம்  முதல் 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களை மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவையில் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதாலும், விவசாய நடவடிக்கைகளுக்கான அடிப்படைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு போதுமானளவு நேரம் கிடைத்திருப்பதைக் கருத்தில் கொண்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, எதிர்வரும் வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் வழக்கம் போல் அரச நிறுவனங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்தைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டமையாலும் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு வெள்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களை மூடுவதற்கு கடந்த ஜூன் 13ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய குறித்த ஆலோசனைகள் அடங்கிய 03 மாத காலப்பகுதிக்கு ஏற்புடைய வகையில் ஜூன் 15ஆம் திகதிய 15/2022 ஆம் இலக்க அரச பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...