9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி நாளை ஆரம்பிக்கிறார்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (03 ) காலை10.30 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கடிதம் மூலம் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் 2290/35 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக கடந்த ஜூலை 28 ஆம் திகதி ஜனாதிபதியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல் தொடர்பான பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம் மற்றும் அது தொடர்பான தகவல்களை பாராளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் இறுதியாக கடந்த புதன்கிழமை கூடியது.இதன் போது அவசரகால நிலைமை தொடர்பான விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பின் மூலம் அது நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நாளை ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை நடைபெறவுள்ளதோடு தற்போதைய பொருளாதார நெருக்கடி, எதிர்கால திட்டங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக அறியவருகிறது.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...