- போக்குவரத்து பிரச்சினை அற்ற பாடசாலைகள் 5 நாட்களும் தொடரலாம்
ஓகஸ்ட் 01 முதல் 05 வரையான எதிர்வரும் வாரத்திலும் அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும், திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறுமென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (01) முதல் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக இன்று (30) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன், ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக, கடந்த ஜூலை 19ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைக்கு அமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, ஏற்கனவே கல்வி அமைச்சினால் மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேசப் பொறுப்பாளர், பிரதி மற்றும் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், அனைத்து அதிபர்கள் ஆகியோருக்கு வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், ஏற்கனவே முந்தைய வாரங்களில் இடம்பெற்றதைப் போலவே எதிர்வரும் ஓகஸ்ட் 01 முதல் 05 வரையிலான வாரமும் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை, திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றலில் ஈடுபடக்கூடிய செயற்பாடுகளைச் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பாடசாலைகளில் அப்பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்மதத்துடனும் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடனும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தலாம் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலைகளில் உள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு பாடசாலைக்கு வந்து கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நெகிழ்வான அட்டவணையையும் தயாரிக்கலாமென அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு பாடசாலை சேவைக்காக ஒதுக்கப்பட்ட தனியார் பஸ்களை மாகாணப் போக்குவரத்து அதிகாரசபை பயன்படுத்துகிறது என்பதோடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சாதாரண பஸ் கட்டணத்தை செலுத்தி அந்த பஸ்கள் மூலம் போக்குவரத்து வசதிகளை பெற முடியும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Add new comment