கைதான தானிஸ் அலி தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கை

ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சேவைகளுக்கு தங்கல் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, நேற்றையதினம் (26) வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் கைதான சந்தேகநபர் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தானிஸ் அலி எனும் குறித்த சந்தேகநபர், நேற்றையதினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்ற போது விமானத்தில் வைத்து CID யினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை...

கடந்த ஜூலை 13ஆம் திகதி கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பிரதேசங்களில் போராட்டங்களுடன் இணைந்தவாறு வன்முறைகளை மேற்கொண்ட போராட்டக்காரர்கள் ஒரு சிலர், இலங்கை ரூபவாஹினி கூட்டு தாபனத்திற்குள் நுழைந்து அதன் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொண்டு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிக்கைகளை விடுத்து, ரூபவாஹினியின் ஒளிபரப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு இடைநிறுத்துவதற்கும் காரணமான சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர், வெளிநாட்டொன்றுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த வேளையில் நேற்று (26) பிற்பகல் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான குறித்த சந்தேகநபர் 31 வயதான குருணாகல், வேபட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கடந்த ஜூன் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவினர், நிதி அமைச்சின் பிரதிநிதிகள் குழுவுடன் சந்திப்பை மேற்கொள்ள வந்த வேளையில், நிதியமைச்சின் வாயிலை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில், குறித்த சந்தேகநபருக்கு எதிராக, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலையாகாமை தொடர்பாக நீதிமன்றத்தினால் அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், கடந்த ஜூன் 09ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜூன் 12ஆம் திகதி ஜனாதிபதி செயலக போராட்டக்காரர்கள் தங்கியிருந்த இடத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரும் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை 20ஆம் தேதி காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பண்டாரநாயக்க சிலைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த இடத்திற்குச் சென்ற கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தி, பொலிஸ் அதிகாரிகளை குறித்த இடத்திலிருந்து அகற்றியமை தொடர்பில் அவசியமான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் தற்பொழுது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

 

 

 

PDF File: 

Add new comment

Or log in with...