கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி நீடிப்பு

- Straits Times பத்திரிகை செய்தி வெளியீடு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான அனுமதி நீடிக்கப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் பத்திரிகையான Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த செய்தி நிறுவனம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக சிங்கப்பூர் வந்த போது வழங்கப்பட்ட அவரது குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக Straits Times அறிகிறது.

அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) செய்தியாளர்களிடம் கூறிய நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எப்போது நாடு திரும்புவார் என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் அவர் தலைமறைவாகவும் இல்லை, நாடுகடத்தப்படவும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு இலங்கை அரசாங்க அதிகாரி, கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும், இலங்கையின் தலைநகரான கொழும்பின் புறநகரில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்தில் மீண்டும் வாழ ஆர்வமாக இருப்பதாகவும், Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 14ஆம் திகதி, மாலைதீவிலிருந்து SAUDIA விமானம் மூலம் சிங்கப்பூரின் Changi விமான நிலையத்திற்கு வந்த,  73 வயதான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் தங்கியிருக்கும் பயண அனுமதி வழங்கப்பட்டது.

பணவீக்கம் அதிகரித்து உணவு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளின் விலைகள் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் தனது அரசாங்கத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையை விட்டு வெளியேறினார்.

அவர் சிங்கப்பூர் வந்த சிறிது நேரத்திலேயே, தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். ஜூலை 15 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவரது கூட்டாளியும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த வாரம் புதிய ஜனாதிபதியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட புதிய வீசா எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிடும் என்பதை Straits Times அறிகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பத்தில் சிங்கப்பூரின் நகர மையத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார், அதன் பின்னர் ஒரு தனியார் இல்லத்திற்கு அவர் மாறியதாக நம்பப்படுகிறது.

அவர் சிங்கப்பூர் வந்ததிலிருந்து அவரது பிரசன்னத்தை காண்பிக்கவில்லை என்பதுடன், பொது வெளியிலும் அவரை காணக் கிடைக்கவில்லை.

அவர் ஜூலை 14 ஆம் திகதி வந்த சிறிது நேரத்திலேயே, வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்திற்காக இங்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தியிருந்தார் எனவும், அவர் புகலிடம் கோரவில்லையென்றும், அங்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார்.

சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை என குறித்த பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

சமூகப் பயணங்களுக்காக சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு பொதுவாக 30 நாட்கள் வரையிலான குறுகிய கால பயண அனுமதிச்சீட்டு வழங்கப்படுமென, கடந்த புதன்கிழமை (ஜூலை 20), குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை (Immigration and Checkpoints Authorit - ICA) ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தது.

இங்கு தங்குவதை நீடிக்க விரும்புபவர்கள் தங்கள், வருகை அனுமதி அட்டையை (visit pass) நீடிக்க ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஒவ்வொன்றாக பரிசீலிக்கப்படுமென ICA தெரிவித்துள்ளது.

<<இது தொடர்பில் Straits Times வெளியிட்டுள்ள செய்தி>>


Add new comment

Or log in with...