கோட்டா கோ கம செஞ்சிலுவைச் சங்க முகாம் அகற்றப்பட்டமைக்கு விளக்கம்

- இதுவரை ரூ. 1 கோடி செலவு
- 20,000 இற்கும் அதிகமானோருக்கு முதலுதவி
- 1,500 இற்கும் அதிக அம்பியூலன்ஸ் சேவைகள்

கோட்டா கோ கம போராட்ட களத்தில்  இருந்த தமது முதலுதவி முகாமை அகற்றியுள்ளமை தொடர்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜூலை 21 முதல் தமது முகாமை அகற்றியுள்ளதாக, செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே குறித்த நடவடிக்கையை எடுத்ததாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் சுற்றளவு பிரதேசத்தில் எவரும் நுழைய தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமக்கு ஜூலை 19ஆம் திகதி கிடைத்த தகவலுக்கமைய, நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமது முகாமை ஜூலை 21ஆம் திகதி அகற்றிக் கொண்டதாக, செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று (22) அதிகாலை வேளையில், பாதுகாப்புப்படையினரால் கோட்டா கோ கம பகுதி முற்றுகையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தெடார்ந்து அப்பிரதேசத்தில் பெருமளவானோர் வர ஆரம்பித்த நிலையில், அங்கு முதலுதவியின் தேவை தொடர்பில் கருத்திற் கொண்டு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பியூலன்ஸ் சேவை, கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிகரித்த மக்களின் வருகையை கருத்திற் கொண்டு, ஏப்ரல் 11ஆம் திகதி அதன் முகாமொன்று நிரந்தரமாக அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், கடந்த 3 மாதங்களில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் 80 தொண்டர்கள் மற்றும் வைத்தியர்களால் 24 மணி நேர சேவைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, இதற்காக ரூ. 1 கோடிக்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், 20,000 இற்கும் அதிகமானோருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல 1,500 இற்கும் அதிக தடவைகள் அம்பியூலன்ஸ் சேவைகள் வழங்கப்பட்டதாகவும், செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

 

 


Add new comment

Or log in with...