- போட்டியாளர்கள்: ரணில், டளஸ், அநுர
- ஶ்ரீ.ல.பொ.பெ., இ.தொ.கா., தே.கா. உள்ளிட்ட கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு
- த.தே.கூ., ஶ்ரீ.ல.சு.க., சுயாதீன எம்.பிக்கள் டளஸுக்கு ஆதரவு
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்றையதினம் (20) பாராளுமன்றம் கூடியுள்ளது.
இலங்கை பாராளுமன்றில் முதன் முறையாக இடம்பெறும் இப்போட்டியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சபாநாயகர் உள்ளிட்ட எம்.பிக்கள் வாக்களிப்பு
பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக வாக்களிப்பில் ஈடுபடவுள்ளதோடு, சபாநாயகர் மஹிந்த யாபாவும் இதில் வாக்களிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றில் பதவி நிலை அடிப்படை ஒழுங்கிலும் (சபாநாயகர், பதில் ஜனாதிபதி/ பிரதமர்) அதனைத் தொடர்ந்து சிங்கள அகர வரிசை ஒழுங்கின் படியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் ஈடுபடுவர்.
அந்த வகையில் ஆளும் பிரதான கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமன்றி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோரும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, டளஸ் அழகப்பெருமவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியின் குறிப்பிட்ட சிலரும், அக்கட்சியின் மூலம் தெரிவாகி பாராளுமன்றில் சுயாதீன செயற்படுகின்ற எம்.பிக்கள், ஶ்ரீ.ல.சு.க. உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு இதுவரை ஆதரவளிப்பதாக எந்தவொரு கட்சியும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தல்/ தெரிவு
1981ஆம் ஆண்டு இலக்கம் 2 ஜனாதிபதித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று (20) இடம்பெறும் புதிய ஜனாதிபதி தெரிவுக்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவத்தாட்சி அதிகாரியாக தொடர்ந்தும் செயற்படுவார்.
இரகசிய வாக்களிப்பு மூலம் வாக்கெடுப்பு இடம்பெறும்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தனது கையொப்பத்துடனான வாக்குச்சீட்டை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவார்.
வாக்களிப்பில் தங்களது தெரிவு ஒழுங்கின்படி 1, 2, 3 என மாத்திரம் இட வேண்டும். 1 எனும் இலக்கம் கட்டாயம் இடப்பட வேண்டும். அதனைத் தவிர வேறு எந்தவொரு அடையாளமும் இட முடியாது. அவ்வாறு இடப்படும் வாக்கு செல்லுபடியற்றதாக்கப்படும்.
113 வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக/ வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவார்.
Add new comment