பஸ் கட்டணம் 2.23% இனால் குறைப்பு; குறைந்தபட்ச கட்டணம் ரூ. 38

இன்று நள்ளிரவு (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 2.23% இனால் குறைக்கப்படுவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய ரூ. 40 ஆக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 38 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டண குறைப்பு, தனியார் மற்றும் இ.போ.ச. ஆகிய இரு பஸ் சேவைகளுக்கும் பொருந்தும்.

நேற்று முன்தினம் (17) இரவு 10.00 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் ரூ. 20 - 20 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் LIOC நிறுவனங்களால் எரிபொருள் விலைகள்,

பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 470 இருந்து ரூ. 450 (ரூ. 20 ஆல் குறைப்பு)
ஒக்டேன் 95: ரூ. 550 இருந்து ரூ. 540 (ரூ. 10 ஆல் குறைப்பு)

டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 460 இருந்து ரூ. 440 (ரூ. 20 ஆல் குறைப்பு)
சுப்பர் டீசல்: ரூ. 520 இருந்து ரூ. 510 (ரூ. 10 ஆல் குறைப்பு)

ஆக திருத்தப்பட்டிருந்தன.

கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, பஸ் கட்டணங்கள் பல தடவைகள் அதிகரிகப்பட்டிருந்தன.

அந்த வகையில், கடந்த ஜூன் 26ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, வருடாந்தம் பஸ் கட்டணங்களை திருத்துவது தொடர்பான தேசிய கொள்கையின் அடிப்படையில் ஜூலை 01ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 22% ஆல் அதிகரிக்கபட்டிருந்தன.

அந்த வகையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32 இலிருந்து ரூ. 40 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது டீசல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணங்களை 4 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பஸ்  உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...