ஜனாதிபதி பதவி: சஜித் விலகி டளஸின் பெயரை பிரேரித்தார் (Video)

- டளஸை வழிமொழிந்தார் ஜீ.எல். பீரிஸ்
- ரணிலை பிரேரித்தார் தினேஷ்; வழிமொழிந்தார் மனுஷ நாணயக்கார
- அநுரவை பிரேரித்தார் விஜித; வழிமொழிந்தார் ஹரினி

ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகி, டளஸ் அழகப்பெருமவின் பெயரை அப்பதவிக்காக பிரேரித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.

இன்றையதினம் (19) ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு கோரும் அவை நடவடிக்கையின்போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவத்தாட்சி அதிகாரியாக செயல்பட்டார்.

அதற்கமைய, வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான பெயர்களை பிரேரிக்குமாறும், அதனை வழி மொழியுமாறும் தெரிவித்தார்.

இது தொடர்பில் வாத விவாதங்களை மேற்கொள்ள முடியாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பெயர்கள் முன்மொழிவு
முதன் முதலில் டளஸ் அழகப்பெருமவின் பெயரை சஜித் பிரேமதாஸ பிரேரித்ததோடு, அதனை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெயராக, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை அவைத் தலைவரும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான அமைச்சர் தினேஷ் குணவர்தன பிரேரித்தார், அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார (ஐ.ம.ச.) வழி மொழிந்தார்.

3ஆவது பெயராக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை, அக்கட்சியைச் சேர்ந்த விஜித ஹேரத் பிரேரித்ததோடு, அதனை அக்கட்சி உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய பிரேரித்தார்.

இதனைத் தொடர்ந்து நாளையதினம் (20) மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகிய சஜித்
ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் விலகுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று மு.ப. தனது ட்விட்டர் கணக்கில் அறிவித்திருந்தார்.

 

 

அதில் அவர்,

நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். ஐ.ம.ச. உள்ளிட்ட எமது கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி பங்காளிக் கட்சிகள், டளஸ் அழகப்பெரும வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைக்கும்.

எனத் தெரிவித்துள்ளார்.

வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கான தெரிவு
1981ஆம் ஆண்டு இலக்கம் 2 ஜனாதிபதித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் நாளை (20) இடம்பெறும் புதிய ஜனாதிபதி தெரிவுக்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவத்தாட்சி அதிகாரியாக தொடர்ந்தும் செயற்படுவார்.

இரகசிய வாக்களிப்பு மூலம் வாக்கெடுப்பு நாளை இடம்பெறும்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இந்த பதவியை வகிப்பதற்கான இணங்கும் எழுத்துமூல இணக்கப்பாடு முன்கூட்டியே இன்றையதினம் வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி பதவிக்கு பிரேரிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர், குறித்த சந்தர்ப்பத்தில் சபையில் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அதனைத் தொடர்ந்து குறித்த பெயரை மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் வழிமொழிய வேண்டும்.

இது தொடர்பில் வாத விவாதங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்கள் பிரேரிக்கப்படும் பட்சத்தில் ஜனாதிபதிக்கான தேர்தலை நடாத்த திகதி குறிப்பிடப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஒருவரின் பெயர் மாத்திரம் ஏகமனதாக தெரிவிக்கப்பட்டால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

PDF File: 

Add new comment

Or log in with...