- பாராளுமன்றம் நாளை கூடும்; 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி
- ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினரிடம் கோரிக்கை
- அதுவரை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (14) முதல் அமுலாகும் வகையில் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இலங்கையின் அரசியலமைப்பின் 38 (1) (ஆ) பிரிவிற்கு அமைய, ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததன் மூலம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய அரசியலமைப்பிற்கு அமைய, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதுவரை பதில் ஜனாதிபதியாக பிரதமர் செயற்படுவார் எனவும் அறிவித்தார்.
1981ஆம் ஆண்டின் (2)ஆம் பிரிவின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் விசேட விதிமுறைகள் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 40ஆவது பிரிவின் கீழ் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும், இச்செயன்முறையை மிக விரைவாகவும் மிகவும் வெற்றிகராமாகவும் முடிப்பது தனது நோக்கம் என அவர் தெரிவித்தார்.
இச்செயன்முறையை உச்ச ஜனநாயக ரீதியாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஜனநாயக செயன்முறைக்கு உச்ச ஒத்துழைப்பை வழங்குமாறு, அனைத்து கட்சித் தலைவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
உரிய பாராளுமன்ற விதிமுறைகளை பேணுவதற்காக, பாராளுமன்றத்திலுள்ள அனைத்து பிரதிநிதிகளும் சுதந்திரமாக தமது மனச்சாட்சிக்கு அமைய நடந்து கொள்வதற்காகவும், அதில் கலந்து கொள்வதற்கும் உரிய அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தருமாறும், அவ்வாறான அமைதியான சூழ்நிலையில் அனைத்து பொறுப்புதாரிகளின் ஒத்துழைப்புடன், 7 நாட்கள் எனும் குறைந்த காலப் பகுதிக்குள், அதைன்து பொறுப்புதாரிகளின் பங்குபற்றுதலுடன் இச்செயன்முறையை நிறைவு செய்ய தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், நாளையதினம் (16) சனிக்கிழமை, பாராளுமன்றத்தை கூட்டவுள்ளதாகவும் அதில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது நடைபெறுகின்றது.
இன்று மு.ப. 10 மணி முதல் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறுவதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதி தெரிவு, பிரதமர் பதவி, தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment