கோட்டாபய, பசில் நாட்டை விட்டு செல்ல உதவி; இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்‌ஷ ஆகியோர் இலங்கையிலிருந்து வெளியேற இந்தியா உதவி செய்ததாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் இதனை அறிவித்துள்ளது.

 

 

இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்‌ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக, எவ்வித அடிப்படையற்றதும் ஊகங்களின்  அடிப்படையிலும் வெளியிட்டுள்ள செய்தியை, இந்திய உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுக்கிறது. ஜனநாயக வழிமுறைகள் மற்றும் மதிப்புகள், நிறுவப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை அவர்கள் உணர முயல்கிறார்கள்."

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் பெறுமானங்களின் அடிப்படையில், இலங்கையில் நிறுவப்பட்டுள்ள ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் இலங்கை அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம், இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.

ஆனால், அதற்கு முன்னரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய, இராணுவத்தின் பாதுகாப்பில் தலைமறைவாக இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தான் இன்றையதினம் (13) ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மூலம் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சர்வகட்சி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், நாட்டின் புதிய ஜனாதிபதியை எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றன.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கையளிக்கும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தனது பதவியில் நீடிப்பாராயின், அவரே பதில் ஜனாதிபதியாக தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

பிரதமரும் பதவி விலகும் நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (3) அதிகாலை விமானப்படை விமானம் மூலம் தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் இரு பாதுகாவலர்களுடன் இலங்கையில் மாலைதீவை சென்றடைந்துள்ளார்.


Add new comment

Or log in with...