கோட்டாபய நாளை பதவி விலகியதும் புதிய ஜனாதிபதி தெரிவுக்கு 20ஆம் திகதி வாக்கெடுப்பு

- வேட்புமனு 15 முதல் 19 வரை பொறுப்பேற்பு
- விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

புதிய ஜனாதிபதியை எதிர்வரும் 20ஆம் திகதி நியமிப்பதற்கு நேற்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அரசியலமைப்புக்கு அமைய புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் அடுத்தவார செவ்வாய்க்கிழமையன்று நிறைவுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து எதிர்வரும் வாரத்தில் புதன் அல்லது வியாழக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளைய தினம் ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யப் போவதாக பிரதமருக்கும் சபாநாயகருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை இராஜினாமா செய்தபின் புதிய ஜனாதிபதியொருவரை நியமிப்பது மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

மிக விரைவாக இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிரதமரின் தலைமையில் அமைச்சரவை கூடியதாகவும் இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்யவேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அறிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆளும்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க- ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டுமென்றும் குறிப்பிட்டதுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கியஸ்தர்கள் 25 பேரை தெரிவுசெய்து குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இன்றைய தினம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...