இந்திய அணியை வீழ்த்தி தொடரை 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து

இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான 5-வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது.

இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ஓட்டங்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ஓட்டங்களையும் குவித்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 106 ஓட்டங்களை குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 132 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் 245 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இதனை தொடர்ந்து 378 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ரூவ்லி களமிறங்கினர். இரு வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜாக் க்ரூவ்லி 46 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஒலிவ் போப் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

ஒரு கட்டத்தில் 109 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

எனினும், அடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் ஜொனி பேர்ஸ்டோவ் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர்.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ஓட்டங்களை குவித்திருந்தது.

ஜோ ரூட் 76 ஓட்டங்களுடனும், பேர்ஸ்டோவ் 72 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தநிலையில் 5-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது. ஜோ ரூட் – பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ் – ஜோரூட் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 378 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.


Add new comment

Or log in with...