இலங்கை -அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை (08) காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணிக்கு துனித் வெல்லாலகேவுடன், ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளில் மாத்திரம் விளையாடிவந்த மஹீஷ் தீக்ஷன மற்றும் புதுமுக சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மூவரும் இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை என்பதுடன், மஹீஷ் தீக்ஷன இதற்கு முதல் 3 முதற்தர போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். பிரபாத் ஜயசூரிய அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளில் விளையாடியதுடன், 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்த துனித் வெல்லாலகே, நாளை வெள்ளிக்கிழமை (08) நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து சுழல் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான லசித் எம்புல்தெனிய அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசியிருக்கவில்லை.
லசித் எம்புல்தெனியவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு இடதுகை சுழல் பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், துனித் வெல்லாலகேவுக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், ஜெப்ரி வெண்டர்சே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனவே, இவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் அஷ்டன் அகார் இழக்கவுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது அகார் காயம் அடைந்தார், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அகாருக்கு பதிலாக 35 வயதான ஜோன் ஹாலண்டை அணியில் சேர்க்க அந்நாட்டு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹாலண்ட் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 2016 இல் காலியில் நடந்த டெஸ்ட் வெற்றியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் 2018 முதல் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.
Add new comment