யா/யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை திறன் வகுப்பறை திறப்பு விழா கடந்த 2022.07.04அன்று திங்கட்கிழமை அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. அதிபர் தனது தலைமை உரையிலே "இவ்விரண்டு Smart board உம் எமது மாணவர்களின் கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. இத்திறன் வகுப்பறைகள் மாணவரின் சுயகற்றலையும் தேடி அறியும் ஆற்றலையும் மேம்படுத்தும் என்பதோடு இதனை தந்து உதவிய டொக்டர் ஜோதிலிங்கம், திருமதி இ. ஜோதிலிங்கம், டொக்டர் இ. நித்தியானந்தன் ரத்னம் அறக்கட்டளை நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை பாடசாலை சமூகம் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர் நாகலிங்கம் சிவநேசன் தனது உரையில் "இப்பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட திறன் வகுப்பறையானது மாணவரை நவீன முறையில் வளர்த்தெடுக்க உதவும்" எனக் குறிப்பிட்டார். சிறந்த செயற்பாட்டுக்கு காரணமாக அமைந்த பெருமக்களான அன்பு உள்ளங்களை மனமார பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் 2016இல் அதிபர் பதவியேற்றதன் பின்னர் ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் தமிழ், ஆங்கில போட்டிகளில் மாணவர்கள் பல தேசிய மட்டங்களைப் பெற்றதுடன் குறிப்பாக தரம் 5பரீட்சையிலும் 2021இல் திறன் வகுப்பறை மூலம் எதிர்பாராத பெரும் வளர்ச்சியை இப்பாடசாலை கண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தனது உரையின் போது இப்பாடசாலைக்கு திறன் வகுப்பறையை ஒழுங்கமைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து டொக்டர் ஜோதிலிங்கம், இப்பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் தானும் தனது மனைவியும் உதவுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அத்துடன் மாணவரின் செயற்பாடுகள் குறித்தும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்;.
மாணவரின் தமிழ், ஆங்கில பேச்சுக்களும் Smart board கற்பித்தல் விளக்கம் ((Presentation) நிகழ்த்தப்பட்டமைக்கு வாழ்த்துக் கூறி இப்பிள்ளைகள் சமூகத்தில் பெரும் சிறப்பு மிக்கவர்களாக திகழ்வார்கள் என வாழ்த்தினார்.
இவ்விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.
Add new comment