இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி

தமிழக அமைச்சரிடம்  DGP சைலேந்திரபாபு கையளிப்பு

 

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 01 கோடியே 40 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி  நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தமென நாடு முழுவதும் இயல்புநிலை முடங்கி வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீஸ்துறை சார்பில் 01 கோடியே 34 இலட்சம் (இந்திய ரூபா) ரூபாவும் இந்திய போலீஸ் பணி அதிகாரிகள் சங்கம் சார்பில் 06 இலட்சத்து 63,000 ரூபாவுமென மொத்தம் 01 கோடியே 40 இலட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

இச் சந்தர்ப்பத்தில் சென்னை போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவால், சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி. முகமது ஷகில் அக்தர், தாம்பரம் போலீஸ் ஆணையர் ஏ.அமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...