பேத்தாழை பொதுநூலகம், விபுலாநந்தர் வாசகர் வட்டம்; ஏற்பாட்டில் ZOOM செயலி ஊடாக 15 ஆவது நிலாமுற்றம்

பேத்தாழை பொதுநூலகமும், விபுலாநந்தர் வாசகர் வட்டமும் இணைந்து பௌர்ணமி தினம் தோறும் மாலை வேளையில் 'நிலா முற்றம்' எனும் இலக்கியக் கருத்தாடல் நிகழ்வை ZOOM செயலி ஊடாக நடத்தி வருகின்றன. இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாத பௌர்ணமியுடன் பதினைந்து மாதங்கள் கடந்துள்ளன. கடந்த மாதம் பதினைந்தாவது நிலா முற்றம் நடைபெற்றது.  

இந்த நிலாமுற்றம் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர் வாழை வாணிகரன் ஆகியோரின் படைப்பாளுமைகள் தொடர்பானதாக அமைந்திருந்தது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் மாணவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வாழைச்சேனை கல்மடுவை சேர்ந்த வாசகர் வட்ட உறுப்பினரும் கவிஞருமான த.கி.ஷர்மிதன் மற்றும் பேத்தாழை விபுலானந்தா கல்லூரி மாணவி செல்வி. தி.யதுர்ஷிகா ஆகியோர் கருத்துரை வழங்கியிருந்தனர்.  

நிகழ்வின் முதல் அங்கமாக நிலா முற்றத்தின் நெறியாளரான பேத்தாழை பொதுநூலகத்தின் பொறுப்பாளர் மரகதம் பிரகாஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.  

அதன் பின்னர் எழுத்தாளர் வாழை வாணிகரன் பற்றிய அறிமுக உரையை கிழக்குப் பல்கலைக்கழக மாணவி யோ.சிவநந்தினி நிகழ்த்தினார். 'வாழை வாணிகரன்' எனும் பெயரிலான ஆசிரியர் நல்லரெட்ணம் விஜிதரன் 'நிர்வாண எழுத்துக்கள்' எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார்.  

 'நிர்வாண எழுத்துக்கள்' கவிதை நூல் தொடர்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர் வட்ட உறுப்பினரும் கவிஞருமான த.கி.ஷர்மிதன் இலக்கிய வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் தன்னுரையில், 66கவிதைப் பூக்களைக் கொண்ட இந்நூலில், காதல், கல்வி, அன்பு, ஆசிரியம், பெண்ணியம், வீரம், தமிழ், உறவு எனப் பல்வேறு பரிமாணங்களைக் காட்டும் கவிதைகள் எளிமையாகவும் எடுப்பாகவும் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.  

அதனைத் தொடர்ந்து முதுபெரும் எழுத்தாளர் அமரர் வ.அ.இராசரத்தினம் அவர்களின் படைப்பாளுமை தொடர்பாகக் கருத்தாடல் இடம்பெற்றது. எழுத்தாளர் தொடர்பான அறிமுகத்தினை செல்வி.ஜெ.அனுசதுர்த்திகா நிகழ்த்தினார். அவர் தனது உரையில், "ஈழத்து இலக்கிய ஆளுமைகளுள் வ.அ மிகவும் சிறப்பானவர். அவருடைய எழுத்துக்கள் மிகவும் ஆழமானவை" எனக் குறிப்பிட்டார்.  

உரையாளர் அறிமுகத்தினை ஆசிரியை திருமதி விஜிதா முருகவேள் நிகழ்த்தினார். "உரையாளர் செல்வி. தி.யதுர்ஷிகா சிறுவயது முதல் இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டவர். வளர்ந்து வரும் இளங்கவிஞர். எதிர்காலத்தில் நன்னிலை பெற்றிட வாழ்த்துகிறேன்" என அவர் தெரிவித்தார்.     அதனைத் தொடர்ந்து யதுர்ஷிகாவினால் வ.அ வின் 'தாய்' சிறுகதை மீதான வாசிப்பு அனுபவம் பகிரப்பட்டது. வ.அ வின் படைப்பாளுமைக்கு இக்கதையும் ஒரு தகுந்த எடுத்துக்காட்டு என அவர் கூறினார்.  

அதனைத் தொடர்ந்து ZOOM வாயிலாக நிலாமுற்றம் நிகழ்வில் இணைந்திருந்த வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் சபையோர் ஆகியோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியரும் வாசகர் வட்ட உறுப்பினருமான எ.த.ஜெயரஞ்சித் "வ.அ வின் படைப்பாளுமையை நன்கு அறிவேன். இவரது படைப்புகள் க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வாழைச்சேனை பிரதேசத்தில் வாணிகரனின் படைப்பு தனித்துவமானது. அவரது நூலுக்கான நயவுரையை வெளியீட்டின் போது நானே வழங்கியிருந்தமை நெகிழ்ச்சி அளிக்கின்றது" என்று குறிப்பிட்டார்.  

கண்டியைச் சேர்ந்தவரும் ஆசிரியருமான ரதி நிலா முற்றம் நிகழ்வுக்கு வாழ்த்துகள் கூறியதுடன், புதிய எழுத்தாளர்களையும் புதிய உரையாளர்களையும் வெளியுலகிற்கு கொண்டு வருவது பாராட்டுக்குரியது எனக் கூறினார்.    அதன் பின்னர் மாணவர்கள் பலரும் நிலா முற்றம் தொடர்பான தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், ஒருங்கிணைப்பாளரின் நன்றியுரையுடன் பதினைந்தாவது நிலா முற்றம் முற்றுப் பெற்றது.  

த.கி.ஷர்மிதன்


Add new comment

Or log in with...