பிரபல சிங்கள நடிகர் ஜெக்சன் அந்தனி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல சிங்கள் நடிகர் ஜெக்சன் அந்தனி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (02) இரவு தலாவ, மொரகொட பிரதேசத்தில் 7ஆம் கட்டை பகுதியில் வைத்து ஜெக்சன் அந்தனி பயணித்த கெப் வாகனம் காட்டு யானையுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த ஜெக்சன் அந்தனி உள்ளிட்ட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெக்சன் அந்தனியின் சகோதரரும் அதில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் கெப் வாகனம் சேதமடைந்துள்ளது.
காயமடைந்த ஜெக்சன் அந்தனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கல்கமுவ பிரதேசத்தில் படப்பிடிப்பொன்றை நிறைவு செய்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அநுராதபுரம் நோக்கி செல்லும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் வீதி விளக்குகள் காணப்படுகின்ற போதிலும் அவை இயங்கவில்லை எனவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால், வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கும், மக்களுக்கும் காட்டு யானைகள் காரணமாக விபத்துகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Add new comment