வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை யாழ் மாநகர சபையில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார். இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன, ஜப்பான் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலேயே ஈடுபட்டிருந்தார். அதேபோன்று நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜப்பான் தூதுவரிடம் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கான ஐப்பானிய தூதுவர் H.E. Mr.MIZUKOSHI Hideaki முல்லைத்தீவு விசுவமடுக்குளம் பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கிருந்து ஐப்பானிய உதவியில் இயங்கிவரும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளார்.
நேற்று ஐப்பான் நாட்டின் நிதியுதவியில் 2மில்லியன் ரூபா செலவிலான நவீன இயந்திரங்கள் தேங்காய் எண்ணை உற்பத்திக்காக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை விசேட, யாழ். விசேட நிருபர்கள்
Add new comment