பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும் 'Leishmaniasis'

மணல் வண்டுகளால் பரவுகின்ற 'லீஷ்மேனியாசிஸ்' (Leishmaniasis) தொற்றுநோய் வடமத்திய மாகாணத்தில் பலருக்கு ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் தெரிவித்தார்.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இத்தொற்றுவியாதி ஏராளமாக பதிவாகியுள்ளது. 2010 முதல் 2015 மற்றும் 2020 இல் அதிக எண்ணிக்கையிலானஎநோயாளிகள் அனுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2016 முதல் 2019 வரை அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்னரான கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்நோய்த் தாக்கம் குறைவாக இருந்துள்ளது. ஆனால் தற்போது 2021 இல் இருந்ததை விட இரண்டு மடங்கு நோயாளிகள் அனுராதபுரம் மாவட்ட போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகளவிலான லீஷ்மேனியாசிஸ் நோயாளர்கள் பதவிய மற்றும் தலாவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்டுள்ளனர். நாச்சியாதீவு, மத்திய நுவரகம் பிரதேச சுகாதார பிரிவுகளிலும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது தம்புத்தேகம, நொச்சியாகம, இராஜாங்கனை, இபலோகம மற்றும் மதவாச்சி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவிலான நோயாளர்கள் காணப்படுகிறனர். இலங்கையில் லீஸ்மேனியசின் நோயைச் சேர்ந்த அறிகுறிகள் கண்டறியப்பட்ட மாவட்டங்களில் அநுராதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் மாத்தறை குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் மணல் ஈக்களை சகல மாவட்டங்களிலும் காணக் கூடியதாகவுள்ளது. இந்த இனங்களில் மிகவும் பொதுவானது ப்ளிபோடமஸ் அர்ஜென்டிஸ் (Phiebitomus Argetipus) என்ற வண்டு இனமாகும். இது முள்ளந்தண்டுள்ள உயிரினங்களில் இரத்தத்தை உறுஞ்சுவதன் மூலம் நோய் பரவுகின்றது. இது சுமார் 2 தொடக்கம் -3 மிமீ நீளமுள்ள அடர் பழுப்பு நிற பூச்சியாகும். வாழை மரம், மானா புதர்கள்,தேக்கு மரங்கள் ஏராளமாக உள்ள பிரதேசங்களில் இவைகள் அதிகளவில் வாழ்கின்றன. ஈரமான நிலத்தடி நீர்நிலைகள் மற்றும் இருண்ட சூழலில், குப்பை சேகரிக்கும் இடங்களில் அவற்றைக் காணக் கூடியதாக இருக்கும். அது குத்திய இரண்டு வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை தோலில் சிவப்பு புள்ளிகள் காணப்படும்.முகம் , கழுத்து கைகள் மற்றும் கால்கள் போன்ற உடலில் வெளிப்படும் பகுதிகளில் மிகவும் பொதுவாக இந்த தழும்புகளைக் காணக் கூடியதாக இருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடல் முழுவதும் தொற்று காணப்படும்.இது ஒரு கட்டியாகக் கூட இருக்கலாம். வலி அல்லது அரிப்பு இல்லாதது. இந்த புடைப்புக்கள் காயங்களின் அறிகுறியாகும். சிகிச்சை தாமதமானால் சிதைந்த வடுக்கள் உருவாகலாம். லீஸ்மேனியசின் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட தொற்று நோயியல் ஆய்வில் பெண்களை விட ஆண்களுக்கே இந்நோய் அதிகமாகக் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இது எல்லா வயதினருக்கும் தொற்றக் கூடியதாக உள்ளது. 20 தொடக்கம் - 40 வயதிற்குட்பட்ட பெரும்பாலான மக்களை பாதிக்கலாம். அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகில் உள்ள அரச மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மருத்துவ மனையில் முறையான சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்த முடியும். பருக்களை அகற்றி முழுமையாக குணமாக்குவது அவசியம் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

லீஷ்மேனியாசிஸ் என்பது உலகில் ஒன்பதாவது பொதுவான தொற்று நோயாகும். தற்போது உலகில் மிகவும் பரவலாக உள்ளது. உலக மக்கள் தொகையில் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20000 முதல் 30000 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 1992 இல் இலங்கையில் முதலாவது லீஷ்மேனியாசிஸ் நோயாளர் அம்பாந்தோட்டை பகுதியில் பதிவாகியதுடன் 2008 செப்டம்பர் மாதம் இலங்கையில் இந்நோய் அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்று பெயரிடப்பட்டது என்றும் வைத்தியர் ஹேமா வீரகோன் மேலும் தெரிவித்தார்.

மதார் தம்பி ஆரிப் - அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...