'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

- 8 அத்தியாயங்களைக் கொண்ட அறிக்கை
- 1,200 இற்கும் மேற்பட்ட சாட்சிகள்; 43 பரிந்துரைகள்; 2 பிற்சேர்க்கைகள்

'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை இன்று (29) முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து, செயலணியின் தலைவர் கலாநிதி ராஜகிய பண்டித கலகொட அத்தே ஞானசார தேரரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 'ஒரே நாடு - ஒரே சட்டம்" என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க, கடந்த 2021 ஒக்டோபர் 26 மற்றும் 2021, நவம்பர் 06 ஆகிய திகதிகளில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது.

கடந்த 2021 ஒக்டோர் 26ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தாபிக்கப்பட்ட குறித்த செயலணியின் கால எல்லை கடந்த மே 27ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.

 

இந்நிலையில், அதன் பணிகளை நிறைவு செய்யும் பொருட்டு மேலும் 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டு, அது தொடர்பான அறிவித்தல் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.

பேராசிரியர் சாந்தி நந்தன விஜேசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் வீரவர்தனலாகே சுமேத மஞ்சுள, கலாநிதி என்.ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, சட்டத்தரணி டபிள்யூ.பி.ஜே.எம்.ஆர். சஞ்சய பண்டார மாரம்பே, ஆர்.ஏ. எரந்த குமார நவரத்ன, பானி வேவல, மௌலவி எம். ஏ.எஸ். மொஹமட் (பாரி), யோகேஸ்வரி பற்குணராஜா, அய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் செயலணியின் ஏனைய உறுப்பினர்களாவர். ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக்க, இச்செயலணியின் செயலாளராக கடமையாற்றினார்.

தொழில் வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புகள், மதக் குழுக்கள், பல்வேறு சமூகங்கள், பல்கலைக்கழக சமூகம், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய 1,200 இற்கும் மேற்பட்ட சாட்சிகளை உள்ளடக்கிய 43 பரிந்துரைகள் மற்றும் 2 பிற்சேர்க்கைகளுடன் இந்த அறிக்கை 8 அத்தியாயங்களைக் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி அநுர திஸாநாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...