அரிசி மாபியாக்கள் மீது டட்லி ஆத்திரமுற்றது ஏன்?

'விவசாயிக்கு அடுத்ததாக கிராமத்தில் நெல் முதலாளி இருக்கின்றார், தரகர் இருக்கின்றார், ஆலை இல்லாமல் நெல்லை வாங்குபவர்கள் இருக்கின்றார்கள், சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் இருக்கின்றார்கள், மொத்த அரிசி விற்பனை வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். இறுதியாகத்தான் சில்லறை வர்த்தகர்களிடம் செல்கின்றது. அதாவது 7 பேர்களைக் கடந்து செல்கிறது'

'அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை தவிர ஒரு சதம் கூட அதிகமாக செலுத்த வேண்டாம். அதிக விலை கேட்டால் பொலிசாரிடமோ நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமோ முறையிடுங்கள்!'

மக்களின் தங்களுக்குரிய முக்கிய உணவான சோறு பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக விவசாயிகள் தொடக்கம் சில்லறைக் கடை உரிமையாளர் வரை பெரும் சேவைகளை ஆற்றுகிறார்கள். ஆனால் இடைத்தரகர்களால் தற்போது மக்கள் சோறுக்குப் பதிலாக வெறும் பானையையே பார்க்க வேண்டியுள்ளது. 150 ரூபாவாக இருந்த ஒரு கிலோ அரிசியின் விலை ஒரு மாதத்துக்குள் 260 ரூபாவாக உயர்ந்துள்ளது. தற்போது அரசினால் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் அரிசி ஏகபோகம் பாரிய அளவில் அரிசியை உற்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர்களிடமே உள்ளது என்று மக்களும் விமர்சகர்களும் தெரிவிக்கின்றார்கள். அதிலும் அரலிய அரிசி உற்பத்தி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேனவின் பெயர் முதலிடத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய அரசியல் பிரச்சினைக்கு மத்தியில் நிலவுகின்ற அரிசி மாபியா தொடர்பாக அவர் எமக்கு தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

கேள்வி: அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. ஏன் அரிசியின் விலை அதிகளவில்அதிகரிக்கப்படுகின்றது?
பதில்:
பொதுமக்கள் வழமையை விட அதிகமாக அரிசியை விலைக்கு வாங்குகிறார்கள். 10 கிலோ அரிசியை வாங்கியவர்கள் தற்போது 50 கிலோ வாங்குகிறார்கள். இவ்வாறு அதிக கேள்வி ஏற்படும் போது விநியோகம் குறைந்து விலை அதிகரிக்கக் கூடும்.

கேள்வி: அதாவது பாரிய நெல் ஆலை உரிமையாளர்களால் கேள்விக்கு ஏற்றவாறு அரிசியை விநியோகிக்க முடியாது உள்ளதா?
பதில்:
தேவையானதை விட அதிகமாக விநியோகிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் பெருமளவு வாங்கி சேமிப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்களது இயந்திரங்களின் வாயை பெரிதாக்கி அதிகளவு அரிசியை போட முடியாதல்லவா?

கேள்வி: அரசாங்கம் நியமித்துள்ள விலைக்கு அரிசியை வழங்குகிறீர்களா?
பதில்:
நிச்சயமாக தற்போது பெற்றுக் கொடுக்கிறோம்.

கேள்வி: அரிசி உற்பத்தியாளர்கள் அனைவரும் அதற்கு ஆதரவு வழங்குகின்றார்களா?
பதில்:
மக்களுக்காக ஆஜராகி இருப்பவர்கள், மக்களைப் பற்றி சிந்திப்பவர்கள், சுயநலம் அற்றவர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு வழங்குகின்றார்கள். அதற்காக சிறிய ஆலை உரிமையாளர்கள் தொடக்கம் பெரிய ஆலை உரிமையாளர்கள் வரை இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

கேள்வி: ஆனாலும் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாரிய ஆலை உரிமையாளர்கள் அதற்கு இணங்க மாட்டோம் எனக் கூறினார்கள். நாடே பார்த்துக் கொண்டிருந்தது அங்கு இடம்பெற்ற சம்பவத்தை அல்லவா?
பதில்:
அந்தச் சம்பவத்தின் மூலம் நிச்சயமாக யார் அரிசி மாபியாவை உருவாக்குகிறார்கள் என்று மக்கள் அறிந்திருப்பார்கள். இவ்வளவு காலமும் டட்லி அரிசி மாபியாவை ஏற்படுத்துகிறார் என்றே கூறி வந்தார்கள். நான் எந்த சந்தர்ப்பத்திலும் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்க வேண்டாம் என்று மக்களுக்கு கூறுகின்றேன்.

கேள்வி: அரிசி விலையேற்றத்துக்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் பொறுப்புக் கூற வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். இவ்வாறு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்? விலையை அதிகரிப்பது அவர்கள் இல்லை, நீங்கள் தானே?
பதில்:
அவர்கள் தானே இவ்வளவு காலமும் நாட்டை ஆண்டார்கள். அரிசி விலை மாத்திரமல்ல, ஏனைய எல்லாப் பொருட்களும் விலை அதிகரித்ததற்கு அவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். அரிசி விலை அல்லது பொருட்களின் விலையேற்றம் பற்றி நாட்டை ஆட்சி செய்த, செய்கின்றவர்கள் தனிப் பொறுப்பு கூறவேண்டும். நாமா அதற்கு பொறுப்பு கூறுவது? நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணவே மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள்.

கேள்வி: தற்போதைய அரிசி பிரச்சினைக்கு விவசாய அமைச்சர், பிரதமர் இரண்டு பேரும் விசேடமாக பொறுப்புக்கூற வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள்? ஏன் இந்த அரசியல்வாதிகள் பக்கம் பந்தை நகர்த்துகிறீர்கள்?
பதில்:
நிச்சயமாக அவர்கள் மாத்திரமல்ல முழு அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும்.

கேள்வி: எதிர்வரும் 8 மாதங்கள், ஒரு வருட காலத்துக்கு இந்த மாபியா இருக்குமா? நாட்டிற்கு என்ன நடக்கும்?
பதில்:
அது நாட்டை ஆள்பவர்களிடம் கேட்க வேண்டிய பிரச்சினை. இக்காலப்பகுதியில் மக்களுக்கு செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்வோம்.

கேள்வி: உங்களது இலாபம் நாளொன்றுக்கு 10 கோடி ரூபா என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் முறைப்பாடு செய்கிறதல்லவா?
பதில்:
பத்துக் கோடியை ஒரு கிலோ நாட்டரிசி விலையால் பிரியுங்கள், அதாவது 220 ரூபாயால். அது நாளொன்றுக்கு மொத்தமாக இலங்கையர்கள் உணவுக்காக எடுக்கும் அரிசியின் அளவு. அதைத்தான் எனது இலாபமாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கேள்வி: ஆனால் இந்த குற்றச்சாட்டை கூறுபவர்கள் உங்களுக்கு எதிராக பேசிக்கொண்டு நீங்கள் மாபியாவில் ஈடுபடுகிறீர்கள் என கூறுவது அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் அல்லவா?
பதில்:
இந்த கதையை கூறுபவர் மூதித்த பெரேரா. அவர் எந்த அடிப்படையும் இல்லாத கள்ள வியாபாரி. எனக்கு காட்டுங்கள் கடந்த பத்து வருடங்களில் அவர் அரிசியை விநியோகித்த கடை எங்கே இருக்கிறது என்று. அதேபோன்று யாருக்காவது அடிப்படை இல்லாமல் நான் கள்வன் என்று கூறினால் அது கௌரவமான விடயமல்ல. அவரது சூழ்ச்சி பற்றி அறிந்து கொள்ள டி எஃப் சி சி வங்கியின் இணையதளத்திற்கு சென்று MUDITH PERERA VS DFCC BANK என்ன அடித்துப் பாருங்கள். அனைத்து ஊழல் வழக்குகள் விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

கேள்வி: உங்களைப் போன்றவர்கள் விவசாயிகளுக்கு உரம் மற்றும் கடன் வழங்கி இறுதியில் கொள்ளை இலாபத்திற்கு நெல்லைப் பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது அல்லவா?
பதில்:
நாம் ஒருபோதும் விவசாயிகளுடன் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை. நாம் அவர்களிடம் இருந்து நெல்லை மாத்திரமே கொள்வனவு செய்கின்றோம்.

கேள்வி: நீங்கள் விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கி இருந்தால், ஏன் அவர்கள் நஞ்சு அருந்தினார்கள் தங்களுடைய அறுவடைக்கு தீ மூட்டினார்கள்?
பதில்:
அவ்வேளையில் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. ஆனால் எமது சக்திக்குட்பட்டு எம்மால் முடிந்தததை செய்தோம்.

கேள்வி: விவசாயிகளிடமிருந்து 120 ரூபாவிற்கு நெல்லை வாங்குகிறீர்கள். ஒன்றரை கிலோ நெல்லே ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆனால் 218 ரூபா வரை அரிசியை விற்பனை செய்தால் அதிக இலாபம் உள்ளது அல்லவா?
பதில்:
அநேகமானவர்களுக்கு தெரியாத உண்மை இதுதான். விவசாயிக்கு அடுத்ததாக கிராமத்தில் நெல் முதலாளி இருக்கின்றார். தரகர் இருக்கின்றார். ஆலை இல்லாமல் நெல்லை வாங்குபவர்கள் இருக்கின்றார்கள். சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் இருக்கின்றார்கள்.மொத்த அரிசி விற்பனை வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். இறுதியாகத்தான் சில்லறை வர்த்தகர்களிடம் செல்கின்றது. அதாவது இலாபமானது 7 பேர்களுக்கிடையே பிரிந்து செல்கிறது. ஆனால் இந்த ஏழு பேரினதும் இலாபத்தை அரிசி ஆலை உரிமையாளர் பெறுவது போன்றே சமூகம் காண்கின்றது.

கேள்வி: உங்கள் மூத்த சகோதரர் ஜனாதிபதியாக இருந்தார். அதனால் உங்களுக்கு பெரும் சக்தி அல்லது நன்மை கிடைத்ததாக கூறலாமா?
பதில்:
பெரும் நஷ்டமே ஏற்பட்டது. நான் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவன். அவரின் அரசியல் பின்னணியை பிடித்துக் கொண்டு என் மீது சேறு பூசுகிறார்கள். இன்றும் அதுதான் நடக்கிறது. இன்று நாட்டில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேன மற்றும் டட்லி சிறிசேன இருவரும் வெவ்வேறான பாத்திரங்கள் என அறிவார்கள். அதனை புரியாத ஒரு சிலரும் இருக்கின்றார்கள்.

ஹிரந்த குணதிலக்க
தமிழில்: வீ.ஆர். வயலட்


Add new comment

Or log in with...