பஸ் கட்டணங்களை 30% இனால் அதிகரிக்க கோரிக்கை

- குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32 இலிருந்து ரூ. 40

எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்களை 30% இனால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு, பஸ் தொழிற்சங்கங்களினால்  கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த கோரிக்கையை போக்குவரத்து அமைச்சிடயம் நாளை கையளிக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறைந்தபட்ச கட்டணமான ரூ. 32 இனை ரூ. 40 ஆக அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, இன்றையதினம் (28) இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது.

இதேவேளை, கடந்த மே 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, பஸ் கட்டணங்கள் சுமார் 20% இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ. 32 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, பஸ் கட்டணங்கள் 35% இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20 இலிருந்து ரூ. 27 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...