பஸ் கட்டண அதிகரிப்பு இன்று இறுதித் தீர்மானம்

போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடல்

ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பஸ் கட்டணங்கள் தொடர்பில் இன்று (28) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இதன்படி இன்று போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார்.

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்ட்டுள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண விலையை அதிகரிக்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் பரிசீலிக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் இன்று செவ்வாய்க்கிழமை (28) முதல் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன முன்னர் தெரிவித்திருந்தார்.

நேற்று (27) முதல் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் முன்னர் தெரிவித்திருந்ததோடு புதிய கட்டணமாக குறைந்தபட்ச விலை 35% முதல் 40% வரை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அதன்படி, புதிய திருத்தத்தின் மூலம் தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் பேருந்து கட்டணத்தை திருத்தியமைக்காவிட்டால் எதிர்காலத்தில் பேருந்து சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட ​போது இரு தடவைகள் விலைகள் அதிகரிக்கப்பட்டன. கடந்த 24 மே மாதம் முதல் பஸ் கட்டணம் 19.5 வீதமாக அதிகரிக்கப்பட்டது. அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக ஆக அதிகரிக்கப்பட்டது. (பா)


Add new comment

Or log in with...