திருகோணமலை மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இச்சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் அல்-அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலய அணியும் அல்-பத்தா மகாவித்தியாலய அணியும் போட்டியிட்டு அல்-பத்தா அணி வெற்றியீட்டியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி அல்- ஹம்றா மகா வித்தியாலய அணிக்கும் புனித சூசையப்பர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்றது. அல்- ஹம்றா மகா வித்தியாலய அணி 01-00 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த வேளையில் ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் புனித சூசையப்பர் கல்லூரி ஆட்டத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. இதன் அடிப்படையில் அல்- ஹம்றா மகா வித்தியாலய அணியும் அல்-பத்தா மகா வித்தியாலய அணியும் இறுதிப் போட்டிக்குத்தெரிவாகின.
இறுதிப் போட்டியில் அல்- ஹம்றா மகா வித்தியாலய அணியானது அல்-பத்தா அணியை 04-00 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தனதாக்கிச் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொள்ள அல்-பத்தா மகா வித்தியாலய அணி இரண்டாமிடத்தையும் அல்-அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலய அணி மூன்றாம் இடத்தையும் சுவீகரித்துக்கொண்டன. சம்பியன் அணிக்கும் இரண்டாமிடத்தைப் பெற்ற அணிக்கும் வெற்றிக் கிண்ணங்கள். பதக்கங்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன. மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்ட அணிக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும், சிறந்த கோல்காப்பாளருக்கான விருதையும் சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதையும் அல்- ஹம்றா மகா வித்தியாலய அணி பெற்றுக்கொண்டது. ரீஎஸ்எஸ்ஏ – யூகே’, லண்டன் சன்ரைஸ் உதைப்பந்தாட்டக் கழகம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளிவ்.ஜீ. திசாநாயக்க, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சுற்றுப்போட்டிக்கு நந்தராஜா, பகீதரன்,மோகன் உட்பட லயன்ஸ் கழகமும் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி சுற்றுப்போட்டியைச் சிறப்பித்தனர்.
திருகோணமலை குறூப் நிருபர்
Add new comment