அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை அணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 18 பேர் கொண்ட இலங்கை குழாத்தில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்கள் பெரும்பாலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பங்களாதேஷ் தொடரின் போது, இலங்கை கிரிக்கெட் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் காமில் மிஷ்ரா மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுமிந்த லக்ஷான் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீசியிருந்த ஜெப்ரி வெண்டர்சே டெஸ்ட் அணியில் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார். இதேவேளை உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்டிருந்த பெதும் நிஸ்ஸங்க மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த மாற்றங்களை தவிர்த்து பாரிய மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் மேற்கொள்ளவில்லை. இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க, சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் பங்களாதேஷ் தொடரின்போது போட்டிகளில் விளையாடாத போதும், அணியில் தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர்.

இலங்கை அணியை பொறுத்தவரை தங்களுடைய இந்த அணியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 4 சுழல் பந்துவீச்சாளர்களை பெயரிட்டுள்ளது. ரமேஷ் மெண்டிஸ் சகலதுறை வீரராக உள்ள போதும், சுழல் பந்துவீச்சை அடிப்படையாகக்கொண்டு அணியில் இடம்பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் சுழல் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே டெஸ்ட் அணியில் மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ளார். இவருடன், அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லக்ஷித ரசன்ஜனவும் முதன்முறையாக தேசிய அணியின் மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, ஜெப்ரி வெண்டர்சே

மேலதிக வீரர்கள்: துனித் வெல்லாலகே, லக்ஷித ரசன்ஜன


Add new comment

Or log in with...