நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளை நடாத்திச் செல்ல மாத்திரம் எரிபொருள்

- இது நாடு முடக்கம் அல்ல; வீட்டிலிருந்து பணியாற்றும் காலம்
- கொழும்பு உள்ளிட்ட நகர பாடசாலைகள் ஜூலை 10 வரை தொடர்ந்து மூடல்

இன்று நள்ளிரவு (28) முதல் ஜூலை 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலம் எரிபொருளை விநியோகிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

போதிய எரிபொருள் இறக்குமதி செய்யப்படாத நிலையில், தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை நாட்டின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மாத்திரம் பயன்படுத்த தீர்மானித்துள்ளதற்கு அமைய, அமைச்சரவையினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எரிபொருள் விநியோக சிக்கல் காரணமாக இவ்வாரம் ஜூன் 27 முதல் ஜூலை 01 வரை மூடுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள பாடசாலைகளை தொடர்ந்தும் ஜூலை 10 வரை அடுத்த வாரமும் மூடுவதற்கு, கல்வி அமைச்சரின் யோசனைக்கமைய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை நடாத்துவது தொடர்பிலான தீர்மானத்தை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளால் மேற்கொள்ள முடியுமென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஜூலை 10ஆம் திகதி வரையான இக்காலப் பகுதி நாடு முடக்கப்படுவதாக (Lock Down) கருத வேண்டாமென, அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் மக்கள் வழமை போன்று தங்களது அன்றாட விடயங்களை செய்வதுடன், இக்காலப் பகுதியில் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான (Work From Home) நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

 


Add new comment

Or log in with...