அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக எரிபொருட்களை வழமை போன்று தடையின்றிப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர். சமையல் எரிவாயு உட்பட எரிபொருட்களின் தட்டுப்பாடே இதற்கான காரணமாகும். அதனால் எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்றுறை அனைத்தும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
அதேநேரம், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில் இரவு பகல் பாராது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்கள் காத்துக் கிடக்கும் நிலைமை நீடித்த வண்ணமுள்ளது. இவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காகக் காத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அவ்விடத்திலேயே உணவை உட்கொள்வதோடு அங்கேயே உறங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் முகம் கொடுத்திருக்கின்றனர். ஏனெனில் வாகனத்தையும் அதன் உதிரிப் பாகங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர்.
எனினும் நாட்டிலுள்ள எரிபொருள் நிலையங்களில் காத்துக் கிடக்கும் பாவனையாளர்களின் எண்ணிக்கையையும் நாட்கணக்கில் காத்திருப்பவர்களையும் நோக்கும் போது பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற்ற பின்னர் எரிபொருள் பாவனை அதிகரித்து விட்டதா? என்ற கேள்வி ஏற்படவே செய்கின்றது. எரிபொருளை சீராகப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையிலும் வீழச்சி ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு முன்பை விடவும், தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் அளவு அதிகரித்து காணப்படுவதை தரவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறான நிலையில் எரிபொருளுக்கு என்ன நடக்கின்றது என்ற வினாவும் எழுந்துள்ளது. அங்குதான் விடயமே இருக்கின்றது. அதாவது எரிபொருளை வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொள்பவர்களில் சிலர் அதனை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்து கொள்ளும் நோக்கில் பதுக்கி வைப்பதாகவும், இன்னும் சிலர் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் அச்செயலில் ஈடுபடுவதாகவும், மேலும் சிலர் வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொள்ளும் எரிபொருளை சொற்ப நேர காலத்திற்குள் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்த விலைக்கு விற்பனை செய்து விட்டு மீண்டும் வரிசையில் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் எரிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன.
'பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் நாட்டின் பல பிரதேசங்களிலும் கடந்த சனிக்கிழமை வரை நடத்திய 670 திடீர் சுற்றிவளைப்புகளின் ஊடாக 64 ஆயிரம் லீற்றர் எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றில் 21 ஆயிரத்து 636 லீற்றர் பெற்றோல், 33 ஆயிரத்து 462 லீற்றர் டீசல், 11 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய் என்பன பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 675 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டிருக்கின்றார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இவ்விதமான செயற்பாடுகளும் துணைபுரியவே செய்கின்றன. இவை முற்றிலும் பிழையானதும் தவறானதுமான செயற்பாடுகளாகும். பொருளாதார நெருக்கடியினால் நாடும் மக்களும் பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள சூழலில், ஒரு சிலர் அற்ப நலன்களை அடைந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபடுகின்றனர். அவர்களது செயற்பாடுகள் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானதாகவே நோக்கப்பட வேண்டும்.
நாடும் மக்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இன்றைய சூழலில், அந்நெருக்கடியில் குளிர்காய நினைப்பதும் அதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளே அன்றி வேறில்லை. எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படும் போதுதான் இந்நெருக்கடியில் இருந்து விரைவாகவும் வேகமாகவும் மீட்சி பெற முடியும்.
ஆகவே எரிபொருள் மற்றும் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வகையில் பதுக்கி வைப்பதையும் முறைகேடான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதையும் தவிர்த்துக் கொள்வது அவசியம். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக இப்பொருளாதார நெருக்கடி தீவிரமடையவோ நீடிக்கவோ எவரும் துணை போகக் கூடாது. நாட்டினதும் மக்களினதும் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படுவது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும்.
Add new comment