வீட்டில் திடீர் தீ: தாய், தந்தை பலி; இரு மகள்கள் வைத்தியசாலையில்

ஹோமாகம, கஹதுடுவை, மாகம்மன பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் (38), தந்தை (47) மரணமடைந்துள்ளதோடு, இரு பிள்ளைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு (25) தங்களது வீட்டின் அறைக்குள் தீ பரவியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் உட்பட நால்வர் உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர்களது 6 வயது பெண் குழந்தை பொரளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 47 வயதான தந்தையும் 38 வயதான தாயும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர்களது 19 வயது பெண் பிள்ளை தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

தீயினால் குறித்த வீட்டின் அறை முற்றாக சேதமடைந்துள்ளதோடு, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...