தற்போது எரிபொருள் வரிசைகளில் நிற்பவர்களுக்கு டோக்கன்

- எரிபொருள் வந்ததும் அவர்களுக்கு அறிவித்து விநியோகிக்கப்படும்
- வரிசைகளை உருவாக்கி டோக்கன் கோர வேண்டாம்

தற்போது எரிபொருள் வரிசைகளில் நிற்பவர்களை அகற்ற டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இன்று (26) அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்பதை தடுப்பதற்காக தற்போது வரிசைகளில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் இல்லாத நிலையில், மேலும் பல நாட்களுக்கு வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பிய அவர், இதனை கருத்திற் கொண்டு தற்போது வரிசைகளில் உள்ளவர்களின் விபரங்களை பதிவு செய்து டோக்கன் வழங்கி, எரிபொருள் கிடைத்ததும் இராணுவத்தினரால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, குறித்த தினத்தில் எத்தனை பேருக்கு வழங்க முடியுமென அறிந்து, அதற்கேற்றாற் போல் டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், ஏனையவர்களுக்கு மறுநாள் என இவ்வாறு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இது தற்போதுள்ள வரிசைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையே அன்றி, வரிசைகளில் வந்து டோக்கனை பெறுமாறு நாம் கோரவில்லை. அதனை மேற்கொள்ள முயற்சிக்காதீர்கள். வரிசைகளில் வந்து டோக்கன் வழங்குமாறு கோர வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

எனவே வரிசைகளில் நிற்க வேண்டாமென கோரிக்கை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...