இலங்கையில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இப்பாதிப்பு அவ்வப்போது தொடர்ந்து கொண்டே வருகின்றது. மாணவர்களால் இன்னுமே தங்களது கல்வியை உரியபடி தொடர முடியாமல் இருக்கின்றது.
2019 ஆம் ஆண்டு புனித ஈஸ்டர் பண்டிகையன்று பயங்கரவாதக் கும்பல் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து நிலவிய அச்சம் காரணமாக பாடசாலைகள் சில காலமாக மூடப்பட்டிருந்தன. பாடசாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கிய வேளையில் உலகப் பெருந்தொற்றான கொவிட் தாக்கம் இலங்கையிலும் பரவியதையடுத்து கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஆனாலும் ‘ஒன்லைன்’ ஊடாகவும், அதன் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பித்தும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து பொதுப் பரீட்சைகளும் நடத்தப்பட்டன. ஆனாலும் மாணவர்களால் முழுமையான தயார்படுத்தலுடன் பரீட்சைக்குத் தோற்ற முடியாதிருந்தது. ஆனாலும் கல்வி நடவடிக்கைகளை இடையூறின்றித் தொடர்வதற்கு வேறு வழியே இருக்கவில்லை.
எமது நாடு கடுமையான போராட்டங்களுக்குப் பின்னர் கொவிட் தொற்று பரவுதலை வெற்றி கொண்டதையடுத்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. பாடசாலைகள் சீராக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு தடங்கல் தற்போது உருவாகியுள்ளது. அதுதான் இன்று எமது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி ஆகும். இலங்கையில் தற்போது எரிபொருளுக்கு நிலவுகின்ற கடும் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து சேவைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் நிலையங்களில் பெற்றோல், டீசல் பெறுவதற்காக வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் காத்து நிற்கின்றன. எனவே மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை தனியார் வாகனங்கள் பெரும்பாலும் நிறுத்திக் கொண்டு விட்டன. அதேசமயம் பொதுப்போக்குவரத்து சேவையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமைக்கு மாணவர்கள் உள்ளாகியுள்ளனர். எனவே மாணவர்களைப் பொறுத்தவரை பாடசாலைக்கு சமுகமளிப்பதென்பது இலகுவான காரியமல்ல.
ஆசிரியர்களின் நிலைமையும் அவ்வாறானதுதான். பெரும்பாலான ஆசிரியர்கள் தூர இடங்களில் இருந்தே தமது பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இன்றைய போக்குவரத்து நெருக்கடியைப் பொறுத்தவரை தூர இடங்களில் இருந்து அன்றாடம் பாடசாலைக்குச் செல்வதென்பது இயலாத காரியம். ஆசிரியர்களுக்கு முடிந்தவரை அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கும்படியான நடைமுறையொன்றை அமுல்படுத்தினால் இப்பிரச்சினையை ஓரளவாவது தவிர்க்க முடியும்.
ஆனால் ஆசிரியர் இடமாற்றம் என்பது கல்வி அலுவலகங்களுடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இடமாற்ற சபையின் செல்வாக்குதான் அங்கே அதிகமாக உள்ளது. இடமாற்ற சபையில் அங்கம் வகிக்கின்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சமயோசிதமாகவும், திறந்த மனதுடனும் சிந்தித்துச் செயற்பட்டால் இடமாற்ற விடயத்தில் ஆசிரியர்கள் கொண்டுள்ள துன்பத்தையும் விரக்தியையும் போக்க முடியும். ஆசிரியர் இடமாற்ற சபையிலுள்ள உறுப்பினர்கள் பாரபட்சமாகவும், ஆசிரியர்களின் கஷ்டங்கள் புரியாமலும் செயற்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வெளிவருவதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இன்றைய பொருளாதார நெருக்கடியினால் உருவான போக்குவரத்து பிரச்சினை காரணமாக பாடசாலைகளுக்கு அடிக்கடி விடுமுறை வழங்கப்படுகின்றது. இதனால் மாணவர்கள் மீண்டும் பாடசாலைச் சூழலில் இருந்து அந்நியப்பட்டுப் போகின்ற நிலைமையொன்று உருவாகி வருகின்றது. கற்பித்தல், கற்றல் நேரம் பெருமளவு குறைவடைந்து கொண்டு போகின்றது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றதென்பது புலனாகின்றது.
போக்குவரத்து நெருக்கடி தீவிரமடைவதால் பாடசாலைகளை வழமையைப் போன்று சுமுகமாக இயங்க வைப்பதென்பது இயலுமான காரியமல்ல. அதற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கும் இடமளிக்க முடியாது. எனவே ‘ஒன்லைன்’ எனப்படுகின்ற நிகழ்நிலைக் கற்பித்தல் மூலமே மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வழியுண்டு.
கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுக் கிடந்த காலப் பகுதியிலும் ஒன்லைன் ஊடாகவே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவராலும் அதனை சீராகத் தொடர முடியாதிருந்தது. ‘ஸ்மார்ட் போன்’ வசதியைக் கொண்டிருக்காத வறிய மாணவர்கள் முற்றாகவே ‘ஒன்லைன்’ ஊடான கல்வியைப் பெற முடியாத நிலைமைக்கு உள்ளாகினர். ஆசிரியர்கள் பலர் ஒன்லைன் ஊடான கற்பித்தலில் முற்றாகவே ஈடுபடவில்லையென்ற குற்றச்சாட்டுகளும் பெற்றோரால் தெரிவிக்கப்பட்டிருந்தன.
நிகழ்நிலைக் கல்வியைப் பொறுத்தவரை இப்பாதிப்புகள் குறித்து பிரதானமாகக் கவனத்தில் கொள்வது அவசியம். இல்லையேல் வறிய மற்றும் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு இடமுண்டு. கல்வி வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் சமமாகக் கிடைப்பதற்கு இடமளிக்கப்படுவது மிக முக்கியம்.
எவ்வாறாயினும் இன்றைய எரிபொருள் நெருக்கடியானது குறுகிய காலத்தில் முடிவுக்கு வரக் கூடிய பிரச்சினையல்ல. தீர்வு வரும்வரை மாணவர்களின் கல்வியை ஒத்திவைக்க முடியாது. தகவல் தொழில்நுட்பம் அபாரமாக வளர்ச்சியடைந்துள்ள இன்றைய யுகத்தில் ஒன்லைன் ஊடான கற்பித்தலில் ஆசிரியர்கள் அனைவரும் ஈடுபடக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
Add new comment