மனித வாழ்வுக்கான கச்சிதமான ஏற்பாடுகள்

அல்லாஹ்தஆலா பிரபஞ்சம் உள்ளிட்ட அத்தனை வஸ்துகளையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருப்பவனாவான். 'அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை 'ஆகுக' எனக்கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது' (02-: 117) என்று அல் குர்ஆன் கூறிக்கொண்டிருக்கின்றது. அவ்வாறான மாபெரும் சக்தியையும் ஆற்றலையும் தன்னகத்தே கொண்டுள்ள அல்லாஹ் படைப்பதோடு நின்று விடாது, தாம் படைக்கின்ற அனைத்து படைப்புக்களையும் நிர்வகிக்கக்கூடியவனாகவும் இருந்து கொண்டிருக்கின்றான். அவனது பராமிப்பும், கண்காணிப்பும் நிர்வாகமும் இல்லாவிட்டால் இப்படைப்புகள் எப்போதோ அழிந்து நாசமாகி இருக்கும்.

உதாரணத்திற்கு ஞாயிற்று தொகுதியை எடுத்து நோக்கினால் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் வலம் வந்த வண்ணமுள்ளன. அவற்றுக்கு நிர்ணியிக்கப்பட்ட ஒழுங்கிலும் பாதையிலும் அவை வலம் வருகின்றன. தமக்கு நிர்ணிக்கப்பட்ட ஒழுங்குக்கு அப்பால் அவை அணுவளவு கூட செயற்பட எண்ணுவதுமில்லை, அதற்காக முயற்சிப்பதுமில்லை. ஏனெனில் அல்லாஹ் விதித்துள்ள நிர்ணயத்திற்கு அப்பால் செயற்பட எண்ணுவது கூட அழிவையும் நாசத்தையுமே தேடித்தரக்கூடியதாகவே இருக்கின்றது. அதனால் அவ்வாறான நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான ஒழுங்கை அல்லாஹ் ஈர்ப்புச்சக்தியைக் கொண்டு உறுதிப்படுத்தி வைத்திருக்கின்றான். அதனால் எந்தவொரு கோளும் ஒன்றை ஒன்று முந்திச் செல்லவோ, நெருங்கிச் செல்லவோ, சொற்ப நேரம் ஒரிடத்தில் தரித்து ஒய்வெடுத்து பயணிக்கவோ அல்லது பிரிந்து விலகிச் செல்லவோ முயற்சிப்பதில்லை.

தமக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குக்கு ஏற்ப செயற்படுவதே அவற்றின் பணியாகும். அதனால் பிரபஞ்சம், அதிலுள்ள கோள்கள் உள்ளிட்ட அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப அச்சொட்டாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள பூமியோ அல்லது வேறு ஏதாவதொரு கோளோ செயற்படுமாயின் அவை ஒன்றுடன் ஒன்று மோதுண்டு பேரழிவுகள் ஏற்படும். குறிப்பாக பூமியிலுள்ள உயிரினங்கள் உள்ளிட்ட படைப்புகளும் அழிவுகளுக்கும் சேதங்களுக்கும் உள்ளாவதைத் தவிர்க்கவே முடியாது.

மனிதன் பூமியில் படைக்கப்பட்டுள்ள ஒரு படைப்பான போதிலும் அவன் பூமியோடும், வளிமண்டலத்தோடும் பிரபஞ்சத்தோடும் பிணைக்கப்பட்டவனாகவே இருக்கின்றான். அதனால் அல்லாஹ்வின் நிர்ணயத்திற்கு ஏற்ப சூரியனை வலம் வந்து கொண்டிருக்கும் பூமி சூரியனை விட்டு விலகிச் செல்வது அல்லது சூரியனை நெருங்கிச் செல்வது இரண்டுமே உயிரின அழிவுக்கு வழிவகுக்கக்கூடியது என்று உயிரின விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். அதாவது சூரியனை பூமி நெருங்கிச் செல்லும் போது உஷ்ணம் அதிகரித்து உயிரினங்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படுவது போன்று சூரினை விட்டு பூமி விலகிச் செல்லும் போது குளிர் அதிகரித்து உயிர்வாழ முடியாத நிலைமை ஏற்படும்.

அதனால் பூமியை அல்லாஹ் மனிதன் உள்ளிட்ட உயிரின வாழ்வுக்கு பொறுத்தமான வகையில் கச்சிதமாக வடிவமைத்திருக்கின்றான். இவ்வடிவமைப்பில் அணுவளவு பலவீனம் ஏற்பட்டாலும் உயிரினங்கள் பலவிதமான பாதிப்புகளுக்கும் தாக்கங்களுக்கும் மாத்திரமல்லாமல் அழிவுகளுக்கும் முகம் கொடுக்கும். குறிப்பாக சூரியனில் இருந்து பல வகையான நச்சுக்கதிர்வீச்சுகள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன. அவற்றில் அல்ட்ரா வயலட் ஊதாக் கதிரும் ஒன்றாகும். இந்நச்சுக் கதிர்வீச்சுகள் பூமியை நேரடியாக வந்தடையுமாயின் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் பல்வேறு விதமான தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். அதனைத் தவிர்ப்பதற்காக ஒசோன் படலம் உள்ளிட்ட கச்சிதமான வடிகட்டல் ஏற்பாடுகளை அல்லாஹ் செய்து வைத்திருக்கின்றான். இவற்றில் பலவீனங்கள் ஏற்பட்டால் கூட மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்படவே செய்யும். குறிப்பாக சூரியனின் ஊதாக்கதிர்கள் பூமியை வந்தடையுமாயின் தோல் புற்று நோய் உள்ளிட்ட பலவித நோய்களுக்கு உள்ளாகவும் நேரிடும்.

மேலும் பூமியிலிருந்து சுமார் 5000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள கோள் ஒன்றிலிருந்து ஒலி வெளிப்பட்ட வண்ணமுள்ளன. அதனை நாஸா விஞ்ஞானிகளும் பதிவு செய்துள்ளனர். அந்த கோள் பூமியை நெருங்கி வருமாயின் அந்த ஒலியின் விளைவாக மனிதனின் செவிப்பறைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் விஞ்ஞாகளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் பூமியின் மேற்பகுதியில் உள்ள வளிமண்டலத்தை எடுத்து நோக்கினால் அதில் பலவித வாயுக்கள் காணப்படுவதை அவதானிக்கலாம். அவற்றில் ஒட்சிசனும் ஒன்றாகும். இந்த ஒட்சிசனுடன் மனித உயிர்வாழ்வு பிணைக்கப்பட்டிருக்கின்றது. வளி மண்டலத்தில் பல வாயுகள் கலந்துள்ள போதிலும் அவற்றில் ஒட்சிசனை மாத்திரம் சுவாசத்தின் ஊடாக உள்வாங்கியபடி உயிர்வாழும் படைப்பாக மனிதன் விளங்குகிறான்.

இவை இவ்வாறிருக்க, மனிதனின் உயிர்வாழ்வுக்கு ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. அந்த ஆரோக்கியத்திற்கு சக்தி மிகவும் அவசியம். அந்த சக்தியை பூமியை அடிப்படையாகக் கொண்டு விளைவிக்கப்படும் உணவுப் பயிர்கள் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை அல்லாஹ் செய்து வைத்திருக்கின்றான். அத்தோடு பூமியிலுள்ள அத்தனை படைப்புக்களையும் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ள அல்லாஹ், அவை மனிதனுக்கு உழைப்பதற்காக ஏற்பாடு செய்து வைத்துள்ளான். அவற்றில் மனிதனை விடவும் பலம் கொண்ட விசாலமான படைப்புகள் காணப்பட்ட போதிலும் அவையும் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப மனிதனுக்கு கட்டுப்பட்டு அவனுக்காக உழைக்கக்கூடியனவாக உள்ளன.

இவ்வாறு அனைத்து படைப்புகளையும் கச்சிதமாகப் படைத்து நிர்வகித்து வருகின்ற அல்லாஹ், அவற்றின் உரிமையாளனாகவும் அவற்றின் மீது அதிகாரம் செலுத்துபவனாகவும் இருக்கின்றான். எந்தவொன்றையும் பண்படுத்துவதற்கும் சீர்திருத்துவதற்கும் அதிகாரம் செலுத்தப்பட வேண்டும். அதனை அவன் செய்கிறான். அவனது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து படைப்புகளும் உள்ளன. அவனது கண்காணிப்பின்றி எந்தவொரு படைப்பும் கிடையாது. படைப்பாளனுக்கும் படைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு நிலையிலும் நீடித்த வண்ணமுள்ளன.

அதனால் தான் அல் குர்ஆன்,'வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனுக்கு கீழ்படிந்தே நடக்கின்றன. அன்றி (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்' (02- : 83) என்றும் 'வானங்களிலும் பூமியில் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிபட்டே முன்பின் செல்கின்றன)' (13- :15) என்று குறிப்பிட்டிருக்கின்றன. இந்த வசனங்களின் படி அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பதோடு அவனுக்கு சிரம்பணிந்து வழிபடக்கூடியனவாகவும் இருப்பது தெளிவாகிறது. அவனது பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் தொடராக இருந்து வருவதால் தான் படைப்புகள் நிம்மதியையும், மன அமைதியும் அடைந்து கொள்கின்றன. இப்பாதுகாப்பும் பராமரிப்புமின்றி ஒரு வினாடிகூட மனிதனால் அமைதி நிம்மதியை பெறவோ, உயிர்வாழவோ முடியாது.

இவ்வாறு மனித உயிர்வாழ்வுக்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் அல்லாஹ் மிக நுணுக்கமாக திட்டமிட்டு மேற்கொண்டுள்ளான். அந்த ஏற்பாடுகள் அனைத்தும் ஆச்சரியமானதும் அற்புதங்கள் நிறைந்தவையுமாகும். இவை மனிதன் தனக்காக செய்து கொண்டுள்ள ஏற்பாடுகள் அல்ல. இருந்தும் இந்த ஏற்பாடுகளின் பெறுமதியையும் மகத்துவத்துவத்தையும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். அது கவலைக்குரிய விடயமாகும். ஆனால் இவற்றை அறிந்தவர்கள் அவனை புகழ்ந்து துதித்து நன்றி செலுத்தி வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே அல்லாஹ் ஏற்பாடு செய்து தந்துள்ள வசதி வாய்ப்புகள், பாதுகாப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்துக்காகவும் அவனுக்காக மனிதன் எவ்வளவு நன்றி செலுத்தினாலும் அவற்றுக்கு ஈடாகாது. என்றாலும் அவனது வழிகாட்டல்களுக்கும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அமைய அவனுக்கு நன்றி செலுத்தி அவனது அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோம்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...